
விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த 'கள்ளழகர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை லைலா. 2000-ம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகர்களாக இருந்த விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகிய கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
பார்த்தேன் ரசித்தேன், தில், தீனா, நந்தா, பிதாமகன் போன்ற படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்ததுடன் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தார். இவரது கண்ணக்குழி சிரிப்புக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம். 90ஸ் கதாநாயகிகளில் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் பிதாமகன் படத்தில் பேசிய ‘ஏ நீ லூசாப்பா' என்ற டயலாக் தமிழ் ரசிகர்களிடையே ரொம்பவே பிரபலம். லைலா என்ற பெயரை சொன்னாலே இந்த டயலாக் தான் ரசிகர்களுக்கு முதலில் நினைவிற்கு வரும். இவர் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
2006-ம் ஆண்டில் ஈரான் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் மெஹதீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த இவர் கடந்த 2022-ம் ஆண்டு கார்த்தி நடித்த சர்தார் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அதுமட்டுமின்றி கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தில் நடித்த இவர், தற்போது ஆதி நடிப்பில் வெளியாகி இருக்கும் சப்தம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது, 44 வயதாகும் லைலா வெப் சீரியல் மற்றும் சின்னதிரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், தான் சிரிப்பு நோயால் அவதிப்படுவதாக லைலா கூறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தான் சிரிக்கும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னால் சிரிப்பதை நிறுத்தவே முடியாது என்றும், மீறி நிறுத்த முயன்றால், கண்களில் இருந்து கண்ணீர் வழியும் என்றும் கூறினார். பிதாமகன் படப்பிடிப்பின்போது ஒரு நிமிடம் சிரிக்காமல் இருக்குமாறு நடிகர் விக்ரம் சவால் விட்டதாகவும், ஆனால் தன்னால் 30 வினாடிகள் கூட சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறி உள்ளார்.
கண்ணக்குழி சிரிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட லைலாவிற்கு சிரிப்பு நோயா? என்ற ஆதங்கத்துடன் அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.