
நடிகை நயன்தாரா, டயானா மரியா குரியன் என்ற இயற்பெயரை சினிமாவிற்காக நயன்தாரா என்று மாற்றிக்கொண்டார். தமிழ் சினிமாவில் ’நம்பர் ஒன்’ நடிகையாக வலம் வரும் இவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர். சமீபகாலமாக இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து பிரபலமான இவர் ஷாருக் கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற பாலிவுட் படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகையாகவும் திகழ்கிறார். தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
2003-ம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.
இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்ததுடன் அடுத்தடுத்து வந்த படங்கள் இவரை முன்னணி நடிகைகள் வரிசையில் உட்கார வைத்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'நானும் ரௌடிதான்' திரைப்படத்தில் நடித்த போது இவர்களுக்குள் காதல் மலர்ந்து 2022-ம்ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி சில மாதங்களிலேயே இரட்டை ஆண் குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தார் நயன்தாரா. இதனை தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்த நயன்தாரா, தங்களின் மகன்களின் பெயரை உயிர், உலக் என பெயரிட்டார். கிடைக்கும் நேரங்களில் தன்னுடைய குழந்தைகளுடன் நேரத்தையும் செலவிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு, சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபட்டு வரும் இவர் சமீபத்தில் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இவர் தயாரிப்பில் உருவான அழகு சாதனப்பொருட்களை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் ஒரு நடிகையாக பயணித்து வரும் இந்த பாதையில், மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் அனைத்து ஆதாரங்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது. நீங்கள் பலரும் என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைத்து வாழ்த்தி இருக்கிறீர்கள். ஆனால், இனிமேல் என்னை ‘நயன்தாரா’ என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் என் பெயர் தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது என்று கூறியுள்ளார்.
டெஸ்ட், மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2, டியர் ஸ்டுடென்ட்ஸ் என நயன்தாரா கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன.