பெயரை அறிவித்த படக்குழு: ‘ராஷ்மிகா மந்தனா’ மிரட்டலான ‘மைசா’ ஃபர்ஸ்ட் லுக்...
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது திரையுலகில் டாப் நடிகையாகவும் வலம் வருகிறார். தனது நடிப்புத் திறமை மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்ட ராஷ்மிகா மந்தனா ‘நேஷனல் க்ரஷ்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவிப்பதால் இவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இவரது நடிப்பில் வெளியான அனிமல், புஷ்பா 2 படங்கள் ரூ. 1000 கோடி வசூலித்த நிலையில் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சாவா திரைப்படமும் உலகம் முழுவதும் ரூ.800 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இவர் கடைசியான, தனுசுக்கு ஜோடியாக குபேரா படத்தில் நடித்திருந்தார். கடந்த 20-ம் தேதி வெளியான இந்த படம் தற்போது வரை ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது.
இந்நிலையில் ரவிந்திரா புல்லே இயக்கத்தில் அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது நடித்து வருகிறார். பெயரிடப்படாத அந்த படத்தின் போஸ்டரை படக்குழு கடந்த ஜூன் 26ம்தேதி வெளியிட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் பெயரை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘மைசா’ (MYSAA) என பெயரிடப்பட்டுள்ளது.
மைசா படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ஒரு பாரம்பரிய புடவையில் பழங்குடியினர் அணியும் நகைகள் மற்றும் மூக்குத்தியுடன் காட்சியளிக்கும் ராஷ்மிகா, கோண்ட் பழங்குடியினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தோற்றத்தில் முற்றிலும் புதிய மற்றும் பயமுறுத்தும் முகபாவனையுடன் காட்சியளிக்கிறார். ரத்தம் சிந்திய தோற்றம் கதையின் மிரட்டலான தருணங்களை நமக்கு முன்வைக்கின்றன.
பெரும் பொருட்செலவில், பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் முழுக்க நாயகியை மையப்படுத்தியே படமாக்க உள்ளார்கள். இந்த படம் நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது எனவும், படப்பிடிப்புக்கு ஆர்வமாக இருப்பதாகவும் ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். போஸ்டரில் ராஷ்மிகா மந்தனாவின் மிரட்டலான லுக்கை பார்த்த பல பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இது கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸ்யமான உலகத்தை மையமாகக் கொண்ட மிகவும் உணர்ச்சிகரமான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் என்று இயக்குநர் ரவீந்திர புள்ளே தெரிவித்தார்.
இது மட்டுமில்லாமல், ராஷ்மிகா பாலிவுட்டில் ‘தம’' என்ற ஹாரர் படத்திலும் நடித்து வருகிறார். இது இவர் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.