
தமிழ் சினிமாவில் கதாநாயகன், நாயகி தவிர்த்து குணச்சித்திர நடிகர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவ்வகையில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து பெயர் போனவர் நடிகை சரண்யா. தமிழ்ப் படங்களில் அம்மா கதாபாத்திரம் என்றாலே பலருக்கும் இவரது ஞாபகம் தான் வரும். அந்த அளவிற்கு தான் ஏற்ற கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக நடிப்பார். மனிதராக பிறந்த எவருக்கும் ஆசைகள் இருப்பது இயல்பு தானே! அதேபோல் நடிகை சரண்யாவுக்கும் ஒரு ஆசை இருக்கிறது. அந்த ஆசை என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
1980 இல் மணிரத்னம் இயக்கி வெளிவந்த நாயகன் திரைப்படத்தில் தான் சரண்யா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் நடித்து விட்டு, சுமார் 8 ஆண்டுகள் திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தார். பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கிய சரண்யா, பெரும்பாலும் கதாநாயகர்களின் அம்மாவாக நடித்து வந்தார். தொடக்க காலத்தில் ராம், தவமாய் தவமிருந்து, எம்டன் மகன் மற்றும் களவானி போன்ற படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து, தனது திறமையை நிரூபித்தார். பல படங்களில் இவரது நடிப்புத் திறன் சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டைப் பெற்றது. 2010 ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக மிகச்சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றது, இவரது சினிமா பயணத்தில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
வேல், பாண்டி, தெனாவட்டு, திருவிளையாடல் ஆரம்பம், முத்துக்கு முத்தாக, கிரீடம், ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை, வேலையில்லா பட்டதாரி, 24, ரெமோ, கொடி மற்றும் கதாநாயகன் உள்ளிட்ட படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். குறிப்பாக “ஆடி போய் ஆவணி வந்தா என் புள்ளா டாப்பா வந்துடுவான்” என களவானி படத்தில் இவர் பேசும் ஒரு வசனம் இன்று வரையிலும் பிரபலமாக உள்ளது.
நடிகை சரண்யாவின் முதல் திருமண வாழ்வு சரிவர அமையாததால், சக நடிகரான பொன்வண்ணனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 பெண் பிள்ளைகள் என்பதால், பெண் குழந்தைகளை அதிகம் பிடிக்குமாம். எப்போதும் தனக்கு ஒரு ஆண் குழந்தை இல்லையெனில் கவலைப்பட்டதே இல்லையாம். ஆனால் பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததால், ஆண்பிள்ளை இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கம் வந்துவிட்டதாம்.
இதுகுறித்து நடிகை சரண்யா கூறுகையில், “நான் பெரும்பாலும் திரைப்படங்களில் ஹீரோவின் அம்மாவாகத் தான் நடிக்கிறேன். அம்மாவாக நடித்து நடித்து, ஆண்பிள்ளைகளின் மீது எனக்கு ஒருவிதமான பைத்தியத்தை அவர்கள் உருவாக்கி விட்டார்கள். இப்போது ஆண்பிள்ளை வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் காலம் கடந்து விட்டது. இனி அதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும் நான் அம்மாவாக நடித்த நடிகர்கள் அனைவருமே எனக்கு ஆண்பிள்ளைகள் தான்” எனக் கூறியுள்ளார்.