
'திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி என ஊரின் பெயரில் பட தலைப்புகளை வைத்து புகழ் பெற்றவர் டைரக்டர் பேரரசு.
அறிமுக இயக்குனர் T.R. பிரபு இயக்கத்தில் வெளிவர உள்ள 'ஜின் - தி பெட்' படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய பேரரசு, பல வருடங்களுக்கு முன் நடந்த சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்து கொண்டனர்.
"இங்கே மேடையில் முன்னாள் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் 'கேயார்' அவர்கள் அமர்ந்திருக்கிறார். இவர் தலைவராக இருந்த போது 25 ஆண்டுகளுக்கு முன்னால் பிரசாந்த், ஷாலினி நடிப்பில் 'பிரியாத வரம் வேண்டும்' என்ற படம் உருவாகி கொண்டிருந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் ஷாலினிக்கு அஜித்துடன் திருமணம் ஆகி விட்டது.
'திருமணத்திருக்கு பிறகு நடிக்க மாட்டேன்' என்று முடிவெடுத்த ஷாலினி பட பிடிப்புக்கு வரவில்லை. படம் பாதியில் நின்றது. பிரியாத வரம் வேண்டும் படத்தின் தயாரிப்பாளர் பல முறை ஷாலினியிடம் கேட்டு பார்த்தும் ஷாலினி நடிக்க வர மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார். ஒரு கட்டத்தில் படத்தின் தயாரிப்பாளர் படத்தை முடிக்க முடியாமல் அழுதே விட்டார்.
தயாரிப்பாளரின் கஷ்டத்தை கேள்விப்பட்ட அப்போது தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த நம் நண்பர் கேயார் நேரடியாக ஷாலினியை சந்திக்க ஷாலினி வீட்டிற்கே சென்றார். ஷாலினி சந்திக்க மறுத்து விட்டார். இருந்தாலும் ஷாலினி வீட்டு வாசலிலேயே பல மணி நேரம் காத்திருந்து ஒரு வழியாக ஷாலினியை சந்தித்தார். ஷாலினியிடம் படத்தின் தயாரிப்பாளர் படும் கஷ்டத்தை புரிய வைத்து பட பிடிப்புக்கு வர வைத்தார்.
ஷாலினி பட பிடிப்புக்கு மீண்டும் வந்து தான் நடிக்க வேண்டிய மீதி பகுதியை நடித்து தந்தார். பிரியாத வரம் வேண்டும் படமும் வெளியானது. கேயார் போன்ற நல்ல உள்ளம் படைத்த தயாரிப்பாளர்கள் அப்போது இருந்ததால்தான் சினிமா அப்போது நன்றாக இருந்தது. மீண்டும் அந்த காலம் வருமா?" என்று ஏக்கத்துடன் முடித்தார் பேரரசு.