சாதனை படைத்த 'தக் லைஃப்' டிரெய்லர் - மகிழ்ச்சியில் படக்குழு!
36 வருடங்களுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் - பிரபல இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் ஜூன் 5ம் தேதி இப்படம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் தக் லைஃப் இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த படத்தில் கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் என மூன்று லெஜண்ட்கள் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான நாயகன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், 36 வருடங்கள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படம் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
சமீபத்தில் கமல்ஹாசன் எழுதி ஆதித்யா, வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடிய இப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி வைரலானது. இந்நிலையில், நேற்று (மே 21-ம்தேதி) 'சுகர் பேபி' என்ற 2வது பாடல் வெளியாகி வைரலாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலின் வரிகளை சிவா ஆனந்த், ஏ.ஆர். ரஹ்மான் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் ‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் சேர்த்து யூடியூபில் 40 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இது படத்திற்கான வலுவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கமல் மற்றும் சிம்பு ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த படத்தின் ஓடிடி வெளியீடு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளது. ஆனால், படம் ரிலீஸாகி, 2 மாதங்கள் கழித்தே நெட்ஃப்ளிக்ஸில் வரும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளது. மற்றொரு சிறப்பம்சமாக இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லைவ் பர்பாமென்ஸ் செய்ய உள்ளார் என்று படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.