

பளு தூக்குதல் போட்டியில் 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் நடிகை பிரகதி. கே.பாக்யராஜ் இயக்கி, அவரே கதாநாயகனாக நடித்து 1994-ம் ஆண்டு வெளிவந்த ‘வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரகதி. அதனை தொடர்ந்து நடிகர் விஜயகாந்த் உடன் பெரிய மருது படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இவர் தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளிலும் நடித்துள்ளார்.
தமிழில் குறைந்தளவு படங்களே நடித்துள்ள இவர், தெலுங்கில் படங்களில் அதிக கவனம் செலுத்தியதுடன், பல வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமா துறையில் இருந்து விலகியிருந்த இவர், அதன் பின்னர் ஜெயம் படத்தின் மூலம் கேரக்டர் நடிகையாக வலம் வந்தார்.
அதனை தொடர்ந்து சிலம்பாட்டம், எத்தன், தோனி, கெத்து ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரை மற்றும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். கடைசியாக பஹீரா என்ற படத்தில் நடித்திருந்தார்.
49 வயதாகும் பிரகதி, உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் தற்போது இவர் பளு தூக்குதலிலும் (Powerlifting) அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் தனது பளு தூக்குதல் பயணத்தை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் ஏற்கனவே பல பதக்கங்களை வென்றுள்ள பிரகதி, தற்போது சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பதக்கம் பெற்றுத் தந்துள்ளார்.
இந்நிலையில், துருக்கியில் நடைபெறவுள்ள ஆசிய ஓபன் மற்றும் மாஸ்டர்ஸ் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2025ல் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பவர் லிஃப்டிங்கில் களமிறங்கி பிரகதி, 4 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
டெட் லிஃப்டில் போட்டியில் தங்கம், பெஞ்ச் பிரஸ் மற்றும் ஸ்குவாட் லிஃப்டிங்கில் 2 வெள்ளி, ஒட்டுமொத்தப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். 49 வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியதன் மூலம் சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் பிரகதி.
சினிமா துறையை தாண்டி தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்க மேடையில் ஏறியது வரை, பிரகதி ஒரு நடிகை மற்றும் விளையாட்டு வீராங்கனையாக தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார் என்று அவருக்கு ரசிகர்களும், திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சர்வதேச அளவில் ஒரு திரைப்பட நடிகை தொழில்முறை ரீதியாக விளையாட்டில் போட்டியிடுவது அரிதான நிகழ்வாகும்.
நடிகர் அஜித் கார் ரேசில் உலகளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வரும் நிலையில் தற்போது பிரகதியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.