
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிகர், பாடகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படம் ஓரளவு மக்களிடையே வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷிடம் எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும், அதை சிறப்பாக செய்வதற்காக 100 சதவீதம் கடினமாக உழைப்பார் என்பதால் தான் அவர் தமிழ் பட உலகின் முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.
வரிசையாக கைநிறைய படங்களுடன் பிஸியாக நடித்து வரும் நடிகர் தனுஷ், தெலுங்கின் முன்னணி இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் வரும் ஜூன் 20-ம்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் தனுஷ் நடிப்பில் வெளியாகும் நேரடி தெலுங்கு படமாகும்.
அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ள 'குபேரா' படத்தில் தனுஷ் உடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சரப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் தனுஷ் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 'பான்-இந்தியா' உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷின் ‘குபேரா’ படத்துடன் போட்டி போட நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது அதர்வாவின் 'டி.என்.ஏ' படம்.
2010-ம் ஆண்டு பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா முரளி. இவர் மறைந்த நடிகர் முரளியின் மகன். அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான 'டி.என்.ஏ' திரைப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார். அதர்வாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சித்தா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் ஜூன் 20-ந் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், தனுஷின் ‘குபேரா’ மற்றும் அதர்வாவின் 'டி.என்.ஏ' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் அதாவது வரும் ஜூன் 20-ந் தேதி வெளியாக உள்ளதால் யாருடைய படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி குபேரா மற்றும் டி.என்.ஏக்கு இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.