இதனால் பிரச்சனை வருமா? 8 வருடங்களுக்குப்பின் மீண்டும் ஒரே நாளில் களமிறங்கும் தல-தளபதி!

இதனால் பிரச்சனை வருமா? 8 வருடங்களுக்குப்பின் மீண்டும் ஒரே நாளில் களமிறங்கும் தல-தளபதி!

எந்தவொரு பண்டிகை நாள் என்றாலும், எந்த நடிகரின் படம் திரைக்கு வந்தாலும், அது அந்த நடிகரின் ரசிகருக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அந்த வகையில் 2014ல் 'வீரம்' - 'ஜில்லா' படங்கள் ஒரே நாளில் தியேட்டரில் இறங்கி பட்டையைக் கிளப்பியது. அதன்பின் தற்போது, 8 ஆண்டுகளுக்குப் பிறகு தல-தளபதியின் 'துணிவு', 'வாரிசு' திரைப்படங்கள் திரையில் ஒரே நாளில் பொங்கல் அன்று வெளியாகவிருக்கிறது.

பெருந்தலைகளின் திரைப்படம் வெளியானாலே அதற்கான கொண்டாட்டம் வேற லெவலில் இருக்கும். தியேட்டரின் வாசலில் பட்டாசு வெடித்தும், மேளதாளம், டான்ஸ், கரகோஷம் என அன்றைய பகல் பொழுது கூட்டத்தால் நிரம்பிவழியும். சில சாலைகளில் டிராஃபிக் ஜாம் கூட ஏற்படும்.

அதிலும் 'தல' ரசிகர்கள் - 'தளபதி' ரசிகர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். 'தலதான் கெத்து... இல்ல தளபதிதான் கெத்து' இதுபோன்ற வாக்குவாதங்களும் சில நேரங்களில் ஏற்படுவதுண்டு. இதனால் சில நேரங்களில் தியேட்டர் ஓனர்களுக்கும் பெரிய தலைவலியும் ஏற்படுவதுண்டு.

பிரச்சனைகளைத் தடுக்க, பாதுகாப்புக்கு போலீஸையும் களத்தில் இறக்குவார்கள். இருந்தும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை கட்டுப்படுத்தவும் முடியாது. காரணம், சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல அது அந்த ரசிகனின் உணர்வுடன் சம்பந்தப்பட்ட விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

பண்டிகை நாட்களில் ஒரேயொரு முன்னணி நடிகரின் படம் மட்டும் ரிலீஸ் ஆகிறது என்றாலே கொண்டாட்டமும், கும்மாளமும் களைகட்டும். தற்சமயம், தல - தளபதி இருவரின் படங்களும் பொங்கல் அன்று ஒரே நாளில் வெளியாவதால் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் கூடியிருந்தாலும், மறுபக்கம் ரசிகர்களின் கொண்டாட்டம் எப்படி இருக்குமோ என்ற பயமும் தியேட்டர் ஓனர்களிடையே இருந்து வருகிறது என்றுதான் கூறமுடியும்.

இரண்டு விதமான ரசிகர் கூட்டத்தை கையாள்வது என்பது சற்று கடினமான விஷயம்தான். என்னதான் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டாலும் சில நேரங்களில் ரசிகர்களின் கமெண்ட்ஸ், அதனால் ஏற்படும் சில பிரச்சனைகள் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தியேட்டர்களுக்கும் பாதிப்பாகத்தான் அமையும். இதை தவிர்க்க, எதாவது ஒரு திரைப்படத்தை ஒரு நாள் கழித்து வெளியிடலாம். இதனால் ரசிகர்களுக்கும் நல்லது, தியேட்டர்களுக்கும் நல்லது என்ற கருத்தையும் பலர் முன் வைத்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com