

"பொங்கல் வெளியீட்டில் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குக் கடும் போட்டியைக் கொடுப்பதற்காகக் களமிறங்கக் காத்திருந்த 'பராசக்தி' திரைப்படத்திற்கும் இதுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குச் சென்சார் போர்டு (தணிக்கை வாரியம்) சான்றிதழ் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் தேதியில் மட்டும் போட்டி போடவில்லை; தற்போது தணிக்கைச் சான்றிதழ் பெறுவதிலும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொண்டு போராடி வருகின்றன."
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் , பொங்கல் வெளியீட்டில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு கடும் போட்டியை தரும் வகையில் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருந்தது. இந்த திரைப்படத்தில் முதல்முறையாக ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அந்த திரைப்படத்தில் அதர்வா முரளி , ஸ்ரீ லீலா , சேத்தன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் அடிப்படைக் கதை , ஹிந்தி திணிப்பு காலகட்டத்தில் நடைபெறுகிறது.
ரயில்வே துறையில் ஊழியராக வேலை செய்யும் அண்ணன் சிவகார்த்திகேயனுக்கும் , அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டே ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் இளைஞனாகவும், சிவகார்த்திகேயனின் தம்பியாகவும் அதர்வா முரளி நடித்துள்ளார். எதிரெதிர் திசையில் செல்லும் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டமும் , மொழிப் போராட்டமும் சேர்ந்த கதை கொண்ட பராசக்தி திரைப்படத்தை சுதா கொங்குரா இயக்கியுள்ளார் . இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
படத்தணிக்கையில் சிக்கல்:
ஜனநாயகன் திரைப்படத்தைப் போலவே பராசக்தி திரைப்படமும் அரசியல் சார்ந்த கதைகளத்தை கொண்டுள்ளது. திரைப்படத்தில் உள்ள பல காட்சிகள் ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் இருந்துள்ளது. ஹிந்தி எதிர்ப்பு தொடர்பான பல காட்சிகளில் அரசியல் சார்ந்த வசனங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. படத்தில் தேசிய அரசியலுக்கு எதிராக சில காட்சிகள் இருப்பதால் , இந்த படத்திற்கும் தணிக்கை குழு சான்றிதழ் வழங்க தயக்கம் காட்டியதாக தெரிகிறது.
அதன் பின்னர் படத்தை மறு ஆய்வு செய்வதற்கு சென்சார் போர்ட் குழுவினர் மறு தணிக்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர். படத்தினைப் பார்த்த மறு ஆய்வுக் குழு U/A சான்றிதழ் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இதை வைத்து ஜனநாயகன் திரைப்படத்திற்கு போட்டியாக பொங்கல் ரேசில் களம் இறங்க முடிவு செய்தனர். ஆனால் சில தகவல்களின்படி பராசக்தி திரைப்படத்திற்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை , என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் திட்டமிட்டபடி படம் ஜனவரி 10 ஆம் தேதி பராசக்தி வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. மேலும் பட குழுவும் உடனடியாக தணிக்கை சான்றிதழ் அளிக்கும்படி நீதிமன்றத்தை அணுகவும் இல்லை. விஜய் ரசிகர்கள் இதை ஒரு விளம்பர யுக்தி என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர், மேலும் ஜனநாயகன் வெளியாகும் அன்றே பராசக்தி திரைப்படத்தையும் வெளியிட வேண்டும் என்பதற்காக , இவ்வாறு செய்வதாகவும் கருதுகின்றனர்.
வா வாத்தியார் ரிலீஸ் ஆகுமா?
பொங்கல் வெளியீட்டிற்கு பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜனநாயகனும் பராசக்தியும் வெளியாவதில் சிக்கல்கள் நிலவுவதால் , பருத்திவீரன் கார்த்தி் , ராஜ்கிரண் , கீர்த்தி ஷெட்டி நடித்து நீண்ட காலமாக வெளியீட்டிற்கு காத்திருக்கும் 'வா வாத்தியர் ' திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் , என்று தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.