
தமிழ் சினிமாவில், கிடைக்கும் வாய்ப்புகளில், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் சினிமா பின்புலம் இல்லாதவர்கள். இந்தப் பட்டியலில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகர் மணிகண்டன். ஒருமுறை இவரது நடிப்பைப் பாராட்டி புகழ்ந்தார் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர். அதுவும் மணிகண்டன் வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்பே. பாலச்சந்தர் எப்போது, எதற்காக மணிகண்டனைப் புகழ்ந்தார் என்பதை இப்போது பார்ப்போம்.
ஜெய்பீம், குட் நைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் ஆகிய திரைப்படங்களின் மூலம் தன்னுடைய நடிப்புத் திறனை தமிழ் சினிமாவிற்கு வெளிப்படுத்தினார் நடிகர் மணிகண்டன். தற்போது தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இவரது கதைத் தேர்வு மிகவும் எதார்த்தமானதாக இருப்பது தனிச்சிறப்பு. அதோடு கேமரா முன்பு மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இன்றைய நடிகர்களில் விஜய் சேதுபதிக்குப் பிறகு மிகவும் எதார்த்தமாக நடிப்பவர் மணிகண்டன் என்றால் அது மிகையாகாது.
வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்பு, குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் மணிகண்டன். அப்போது ஒரு குறும்படத்தில் திக்கித் திக்கிப் பேசும் திக்குவாயாக நடித்தார். இவரது இந்த நடிப்பை இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் பார்த்திருக்கிறார். மணிகண்டனின் அசாத்தியமான நடிப்பைப் பார்த்து விட்டு, இந்தப் பையன் யாரு? இவனை நான் பார்க்க வேண்டும் என அழைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவிற்கு சூப்பர் ஸ்டாரையும், உலக நாயகனையும் கொடுத்த இயக்குநர் சிகரம் அழைத்தவுடன், மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார் மணிகண்டன். பாலச்சந்தரை மணிகண்டன் சந்தித்த போது, 'உனக்கு உண்மையிலேயே திக்கு வாய்ப் பழக்கம் இருக்கிறதா?' எனக் கேட்டுள்ளார். அதற்கு 'இல்லை' என பதிலளித்தார் மணிகண்டன். 'நாகேஷ் நடிப்பான் இந்த மாதிரி; அவனுக்குப் பிறகு இந்த மாதிரி யாரும் நடித்தது கிடையாது. நீ எப்படி இப்படி நடித்தாய்! அற்புதமான நடிப்பு' என மணிகண்டனைப் பாராட்டினார் பாலச்சந்தர்.
பல வெற்றிப் படங்களைக் கொடுத்த பாலச்சந்தர், ஒரு நடிகரை பாராட்டுவது என்பது மிகவும் அரிதாக நடக்கும் நிகழ்வாகும். இவரது பாராட்டைப் மணிகண்டன் பெற்றிருக்கிறார் என்றால், நிச்சயமாக இது சாதனை தான். பாலச்சந்தர் பாராட்டியதை சமீபத்தில் மனம் திறந்தார் நடிகர் மணிகண்டன். 'இப்போது இதனைச் சொல்வதற்கே எனக்கு கூச்சமாக இருக்கிறது' என்றார்.
இன்றைய இளம் தலைமுறை நடிகர்களில் ரசிகர்களைக் கவர்ந்த வெற்றிகரமான நடிகராக வலம் வருகிறார் மணிகண்டன். ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு காதலும் கடந்து போகும், காலா, விக்ரம் வேதா மற்றும் நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் நடிகராக மட்டுமின்றி ஒருசில திரைப்படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார்.
மிமிக்ரி செய்வதில் வல்லவரான மணிகண்டன், விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தி கோட் திரைப்படத்தில் விஜயகாந்த் கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசினார். இதுதவிர 'நரை எழுதும் சுயசரிதம்' என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். பன்முகத் திறமை கொண்ட மணிகண்டனின் திரைப் பயணம் இன்னும் பல வெற்றிகளுடன் தொடரட்டும்.