‘துணிவு‘ படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் பலி!

‘துணிவு‘ படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் பலி!

தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் வாரிசு மற்றும் துணிவு படங்கள் திரையரங்குகளில் இன்று அதிகாலை 1 மணி முதல் திரையிடப்பட்டு வருகிறது. நேற்று இரவு முதலே விஜய், அஜித் ரசிகர்கள் படத்தைக் காண ஆவலாக தியேட்டர்களுக்கு வந்த வண்ணம் இருந்தார்கள். பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். படம் வெளியிடப்படும் திரையரங்கு வாயிலில் போஸ்டர்கள், பேனர் கட்டுவதில் இரு தரப்பு ரசிகர்களும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். திருவிழா போல் எல்லா தியேட்டர் முன்பும் ரசிகர்கள் குழுமி இருந்தார்கள். ஆடல், பாடல் மூலம் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு கோயம்பேட்டிலுள்ள ரோகினி திரையங்கில் அஜித் நடித்துள்ள ‘துணிவு‘ படம் பார்க்க சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் (19 ) என்பவர் நண்பர்களுடன் படம் பார்க்க வந்திருக்கிறார்.

அப்போது ஆர்வமிகுதியால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்றுகொண்டிருந்த ட்ரெய்லர் லாரி மீது ஏறி நடனம் ஆடியபடி கீழே குதித்தபோது, முதுகில் பலத்த பாயம் ஏற்பட்டது. உடனடியாக ரசிகர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் (19) என்பதும், ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் உயிரிழந்த சம்பவம் அஜித் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்வமிகுதியால், அஜாக்கிரதையாக நடனமாடி கீழே விழுந்து ஒரு ரசிகர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் விஜய், அஜித் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com