
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று அழைக்கப்படும் இவருக்கு நடிப்பை தாண்டி பைக், கார் ரேஸ்களில் ஆர்வம் அதிகம். இவர் பல்வேறு கார் ரேஸ்களில் கலந்து கொண்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து காரணமாக தற்காலிகமாக கார் ரேஸில் தவிர்த்து வந்த அவர் தற்போது மீண்டும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் துபாய் 24 மணி நேர கார் பந்தயத்தில் கலந்து கொண்ட இவரது ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. 53 வயதான அஜித்குமார் சாதனைக்கு வயது தடையல்ல என்பதை இதன் மூலம் நிறுபித்தார். அதுமட்டுமின்றி இத்தாலி 12ஹெச் கார் பந்தயத்தில் GT992 பிரிவில் களமிறங்கிய அஜித் குமாரின் ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் தன்னால் ஜெயிக்க முடியும் என்பதை நிறுபித்து காட்டினார். கார் ரேஸில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த அஜித்துக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி அஜித் சிலகாலம் கார் ரேஸில் மட்டும் முழு கவனம் செலுத்த உள்ளதால் அக்டோபர் மாதம் வரை படங்களில் நடிக்க மாட்டேன் என்று முன்னரே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கார் பந்தயங்களை முடித்துக்கொண்டு, சமீபத்தில் சென்னை திரும்பிய அஜித் சென்னை விமான நிலையத்தில், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், அஜித் வெளியிட்ட புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் அதை பார்த்து அவரது ரசிகர்கள் துள்ளி குதித்து வருகின்றனர்.
அஜித்தை போன்று அவருடைய மகன் ஆத்விக்கும் கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். விளையாட்டில் ஆர்வம் உடைய ஆத்விக், சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டினோவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர் படிக்கும் பள்ளியில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
இந்நிலையில், மகன் ஆத்விக்கிற்கு சென்னையை அடுத்துள்ள இருங்காட்டு கோட்டையில் உள்ள MIKA Go Kart Circuit-ல் அஜித் ரேஸ் கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொடுத்துள்ளார். தந்தை சொல்லை தட்டாமல் ஆத்விக் அதி வேகத்தில் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் ‘புலிக்கு பிறந்தது பூனையாகுமா’ என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித்தை போலவே அவரது மகன் ஆத்விக்கும் வருங்காலத்தில் மிகப்பெரிய கார் ரேஸராக வருவார் போல என அஜித் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.