
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி குடும்பம், ரோடு ட்ரிப், கார் ரேஸ் என தனக்கென தனி பாதையை வகுத்து, அதில் பயணித்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் 2023-ல் துணிவு திரைப்படம் வெளியான நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் விடாமுயற்சி ரிலீஸ் ஆகி ரசிகர்களை குஷி படுத்தியது.
விடாமுயற்சி திரைப்படம் அஜித் பட சாயலில் இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றி இருந்தாலும், பாக்ஸ் ஆபிசில் ஹிட்டாகி உலகளவில் ரூ.143 கோடி வசூல் செய்தது.
அப்படத்தை தொடர்ந்து அஜித் செம வேகத்தில் முடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் அஜித் இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே எகிறியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், உருவான இந்த படம் அஜித்தின் 63-ஆவது படமாகும். இந்த படத்தில் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நடிகை திரிஷாதான் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், சிம்ரன், பிரபு, ரகுராம், யோகிபாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமான வரவேற்பை பெற்ற நிலையில், இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது மட்டுமின்றி முதல் நாளே படத்தை பார்த்தே ஆக வேண்டும் என ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். ஒரே வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் ரிலீஸாவதும் பல வருடங்களுக்கு பிறகு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இப்படத்தில் இருந்து 'ஓஜி சம்பவம்' மற்றும் 'காட் பிளஸ் யூ' பாடல்கள் வெளியாகி வைரலாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இப்படியான நிலையில் படக்குழு தரப்பில் இருந்து இதுவரை த்ரிஷாவின் லுக், படத்தின் டீசர், அதையடுத்து படத்தின் முதல் பாடல் என அடுத்தடுத்து ரிலீஸ் செய்து படக்குழு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறது.
அதுமட்டுமின்றி இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படம் சிறப்பாக வந்துள்ளதாக கூறியுள்ளனர். பொதுவாக சென்சாரில் உள்ளவர்கள் ஒரு சில படங்களுக்கு மட்டும் தான் இப்படி தங்களது பாராட்டுகளை தெரிவிப்பார்கள். சென்சார் குழுவினரின் பாராட்டை பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் அஜித்தின் ரசிகர் என்பதால் கண்டிப்பாக தேவையான மாஸ் சீன்களை படத்தில் வைத்திருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி அதிவிரைவாக 1 கோடி பார்வைகளை கடந்த நிலையில் தற்போது வரை யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அத்துடன் 'குட் பேட் அக்லி' படம் டிக்கெட் முன்பதிவில் உலகளவில் ரூ.5 கோடி வரை வசூலித்துள்ளதாகவும், முதல் நாள் காட்சிகள் முழுவதும் ஹவுஸ்புல் ஆகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் சிறப்பாக, இந்த படத்தில் சிம்பு ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அஜித் தற்போது தனது அஜித் குமார் ரேசிங் அணியுடன் பிரேசிலில் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வந்தாலும், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டுதான் உள்ளார் என கூறப்படுகிறது.
இந்த படத்தை தெலுங்கில் புஷ்பா உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ள மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. புஷ்பா 2 படம் மூலம் பெரிய வெற்றிக் கண்ட இவர்கள் இப்படத்தை ரூ. 500 கோடி வசூல் பட பட்டியலில் இணைத்து விட வேண்டும் என்று பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக இந்த படத்தை தமிழகத்தில் மட்டுமே 800 தியேட்டர்களில் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த படத்தை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் ரோமியோ பிக்சர்ஸ் மிக பிரமாண்டமா வெளியிடுகிறது. மேலும், படத்தின் தயாரிப்பாளர் இந்தியிலும் இப்படத்தை அதிக திரைகளில் வெளியிட முடிவு செய்துள்ளதால், முதல் நாளிலேயே இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி அஜித்தின் முந்தைய படங்களை விட 'குட் பேட் அக்லி' உலகளவில் அதிக தியேட்டர்களில் வெளியாக உள்ள படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜித்குமாரின் ஒவ்வொரு படமும் வெளியாகும் போது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனால் இந்தபடத்தில் அந்த எதிர்பார்ப்பு இரட்டிப்பாக இருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘விடாமுயற்சி’ காலைவாரிய நிலையில் அஜித்தின் 'குட் பேட் அக்லி' சறுக்குமா, சாதனை படைக்குமா என்று பார்க்கலாம்.