
தமிழ் சினிமாவில் எத்தனையோ சூப்பர் ஹீரோக்களை பார்த்து இருக்கிறோம். ஆனால், அவர்கள் அனைவரிடமிருந்தும் இன்றும் தனித்து இருப்பவர்தான் நடிகர் அஜித் குமார். அப்படி அவர் தனித்து இருப்பதற்கு காரணம் அவரது ரசிகர்களே!
தமிழ் சினிமாவில் சில படங்கள் தோல்வி அடைந்தாலும் ஒவ்வொரு முறையும் அஜித்தை திரையில் பார்க்கும் போதெல்லாம் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். அவரது தனித்துவமான ஸ்டைல், நடிப்பு திறன், எதிலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் இருப்பது போன்ற பண்புகள் காரணமாகவே ரசிகர்கள் அவரை சூப்பர் ஹீரோவாகக் கொண்டாடுகின்றனர்.
ரசிகர் மன்றம் வேண்டாம், அல்டிமேட் ஸ்டார், தல என்ற பட்டங்களும் வேண்டாம் என அஜித்தின் ஒவ்வொரு முடிவுகளும் ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், அவரின் ஒவ்வொரு திரைப்படத்திற்குமே ரசிகர்களின் பட்டாளம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
உதாரணமாக, சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தையே எடுத்துக்கொள்ளலாம். ரசிகர்கள் அதை ஒரு 'ஃபேன் பாய்' நிகழ்வாகவே பார்த்து மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.
அஜித்தின் பயணம் சாதாரணமாக தொடங்கவில்லை. கார்மெண்ட்ஸ் தொழிலில் வேலை பார்த்து வந்த இவர் திரை உலகுக்கு வந்ததே ஒரு விபத்து எனலாம். அவரின் முதல் தமிழ் படம் அமராவதி. அதன்பின் ஒரு மெகா ஹிட் கொடுத்து, தொடர்ச்சியாக படத் தோல்விகளை சந்தித்தார். இவரின் திரைப்பட வாழ்க்கை ஆரம்பத்தில் சிறிய ஏற்றம், பெரிய இறக்கமாக இருந்தது. இருப்பினும், அவர் சரியாக கம் பேக் கொடுத்தபின், வாலி, வில்லன், வேதாளம், விஸ்வாசம், வலிமை போன்ற படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தன.
திரைப்படத்துடன் இணைந்து, அஜித் தனது மற்றொரு ஆர்வமான மோட்டார் ரேஸிங் துறையிலும் கவனத்தை திருப்பினார். வயதில் மிகவும் தாமதமாக ரேஸிங்கில் பங்கேற்றாலும், தனக்கு பிடித்த துறையை கைவிடாமல் முழு முயற்சி செய்து வெற்றியும் பெற்றார்.
இப்படி சினிமா, ரேஸிங் மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். 2008-ல் மோகினி மணி என்ற பெயரில் ஒரு தனியார் அறக்கட்டளை தொடங்கி, ஆயிரக்கணக்கான முதியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் கல்விக்காக போராடும் மாணவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
இதன் அடிப்படையில், இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த விருதான பத்ம பூஷண் விருதை கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி டெல்லியில் ஜனாதிபதியிடம் இருந்து பெற்று கொண்டார். அந்த நேரத்தில், “நம்ம கூட இருக்குறவங்கள நாம நல்லா பாத்துகிட்டா நம்மள மேல இருக்கறவன் பாத்துப்பான்” என்ற அவரின் வசனமே அவருக்கு மிக சரியான பொருத்தமாக இருந்தது.
பல்வேறு தோல்விகள், விமர்சனங்களையும் தாண்டி, யாருடைய துணையுமின்றி, தன்னம்பிக்கையை மட்டுமே நம்பி முன்னேறியவர் அஜித்.
குடும்பம், லட்சியம், ரசிகர்கள் என யாரையும் காயப்படுத்தாமல், மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியரும் இவரே.
இன்றும், எந்த ஒரு சமூக வலைதளங்களில் இல்லையென்றாலும், அவரின் ரசிகர்கள் மீதான அக்கறை, தன்னடக்கம், நன்றி உணர்வு ஆகியவை இளைஞர்களுக்கு ஒரு சிறந்த ரோல் மாடலாக இருக்கின்றன.
கடின உழைப்பும் சாதனைகளும் நிறைந்த வாழ்க்கையை கொண்டவர் நடிகர் அஜித் குமார். உழைப்பாளர் தினத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு கல்கி குழுமத்தின் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள்.