
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெரும் என்று எதிர்பார்த்த நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறாமல் படுதோல்வியை தழுவியது. இந்நிலையில் விரைவில் வெளியாக உள்ள சூர்யாவிற்கு 'ரெட்ரோ' படம் மாஸ் கம் பேக் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் வரும் மே 1-ம்தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இது சூர்யாவின் 44-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிர்கள் இடையே அதிகரித்துள்ளது.
இந்த படத்தினை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, புரோமோஷன் பணிகளில் படக்குழுவும், நடிகர் சூர்யாவும் முழுமூச்சில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த படத்தை தெலுங்கில் விளம்பரப்படுத்தும் நோக்கில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்துக் கொண்டனர்.
இதற்கிடையில் சென்னையில் நடைபெற்ற பட விழாவில் பங்கேற்று பேசிய சூர்யா, 'ரெட்ரோ' படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்தது பற்றி பேசினார்.
அவர் பேசுகையில், "படத்துக்காக மட்டுமே சில காட்சிகளில் நான் சிகரெட் பிடித்தேன். தயவுசெய்து உங்கள் வாழ்க்கையில் சிகரெட் பிடிக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்து கொள்கிறேன். ஒருமுறை தானே, ஒரு பப் தானே என்று ஆரம்பித்தால், இந்த சிகரெட் பழக்கத்தை விடவே முடியாது. உங்களை அது அடிமையாக்கி விடும். அதேபோல் நான் புகைப்பழக்கத்தை என்றுமே ஆதரித்தது இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன். எனவே தயவுசெய்து யாருமே புகைபிடிக்காதீர்கள்'' என்று பேசினார்.
சூர்யாவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு வரவேற்பும் குவிந்து வருகிறது.
‘ரெட்ரோ’ படத்தினைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அந்தப் படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பு முடிந்து விட்டது. அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்க, நாக வம்சி தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார் சூர்யா.