அஸிர்பைஜான் நாட்டில் மீண்டும் விடாமுயற்சி பட பணிகள் துவங்கியுள்ள நிலையில், தல அஜித் ஸ்டண்ட் செய்யும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் அஜித் அஜர்பைஜா, துபாய் என உலாவி வருகிறார்.
இயக்குனர் மகிழ் திருமேனி செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் இணை இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு இயக்குனராக அறிமுகமானவர். இவரின் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கேசான்ரா என பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை பிரபல லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்ற வருடம் மே 1 அஜித் மற்றும் மகிழ் திருமேனியின் AK 62 விடாமுயற்சி என பெயர் அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4 தொடங்கப்பட்டது.
இந்த படத்தின் ஷுட்டிங் படங்கள், வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அஜித் மற்றும் ஆரவ் காருக்குள் உட்கார்ந்து இருக்கும் நிலையில் அந்த கார் கிரேன் உதவியால் அந்தரத்தில் தூக்கப்படுகிறது. அன்பின் ஒரு கட்டத்தில் அந்தரத்திலேயே கார் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் அஜித் மற்றும் ஆரவ் காரின் உள்ளிருக்கும் காட்சியை பார்க்கும்போது திகில் அடைய வைக்கிறது.
அதன் பின்னர் மீண்டும் கார் சுழன்று கொண்டே கீழே இறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வரும் நிலையில் அஜித் மற்றும் ஆரவ் காரில் இருந்து இறங்கும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த காட்சி சூப்பராக படமாக்கப்பட்டதை அடுத்து படக்குழுவினர் கைதட்டி மகிழ்ச்சி அடையும் காட்சி அந்த வீடியோவில் உள்ளன.
மூன்று வீடியோக்கள் கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் இருக்கும் நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக் கமெண்ட் குவிந்து வரும் நிலையில் டூப் இல்லாமல் அஜித் நடித்த இந்த காட்சியை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.