
நடிகர் அஜித் குமார், பைக் பயணங்களின் மீது தீராத காதல் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. நடிப்பைத் தாண்டி, உலகெங்கும் பைக் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே அவரது நீண்ட நாள் கனவு. படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரங்களில், நண்பர்களுடன் பைக் பயணங்களை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
பயணங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி அஜித் ஒருமுறை பேசுகையில், புதிய மனிதர்களைச் சந்திப்பதன் மூலமும், வெவ்வேறு கலாச்சாரங்களை அனுபவிப்பதன் மூலமும் நாம் நம்மைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்டார். குறிப்பாக, சாதி, மதம் போன்ற எந்த வேறுபாடுமின்றி சக மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு பயணங்களின் போதுதான் கிடைக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த கருத்துக்கள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. நடிகர் சத்யராஜ் கூட அஜித்தின் இந்த கருத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
சமீபத்தில், நடிகர் சமுத்திரக்கனி ஒரு பேட்டியில் அஜித்துடன் நடந்த உரையாடல் ஒன்றைப் பற்றி பகிர்ந்துகொண்டார். சமுத்திரக்கனி, அஜித்துடன் "துணிவு" திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். அப்போது அஜித் தனது பயண அனுபவம் ஒன்றை சமுத்திரக்கனியுடன் பகிர்ந்து கொண்டார்.
"துணிவு" படப்பிடிப்பின் போது, அஜித் சமுத்திரக்கனியிடம், "ஒரு முறை பைக்கில் பயணம் செய்து பாருங்கள். அது உங்களை நீங்களே உணர வைக்கும். குறிப்பாக, உங்களை யாருனே தெரியாத இடத்திற்குப் பயணம் செய்யுங்கள். அப்போது உங்களைப் பற்றி இன்னும் நிறைய புரிந்துகொள்வீர்கள்," என்று கூறினார்.
அப்படி ஒரு பயணத்தின் போது, அஜித் வட மாநிலத்தின் ஒரு கிராமத்திற்குச் சென்றிருக்கிறார். அது கடைகளே இல்லாத, முற்றிலும் கிராமிய சூழல் கொண்ட இடம். பயண களைப்பில் அவருக்குப் பசி எடுக்கத் தொடங்கியது. சுற்றிமுற்றும் பார்த்ததில் எந்த உணவகமும் கண்ணுக்குத் தென்படவில்லை. அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவரை அணுகி, தனக்குப் பசிப்பதாகக் கூறினார்.
பின்னர், மொழி தெரியாத அந்த நபர், அஜித்தை தனது குடிசைக்கு அழைத்துச் சென்றார். தனது வீட்டில் இருந்த ஒரு முட்டையை எடுத்து, ரொட்டியுடன் சேர்த்து சமைத்து அஜித்துக்குக் கொடுத்தார். அஜித் சாப்பிட்ட பிறகு, பணத்தை எடுக்க, அந்த ஆடு மேய்ப்பவர் அதை வாங்க மறுத்துவிட்டார். "பசிக்கு உணவளிப்பது மனித தர்மம், அதற்குப் பணம் தேவையில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
அஜித்தின் இந்த அனுபவம், பயணங்கள் என்பவை வேறு இடங்களுக்கு செல்வது மட்டுமல்ல, அது ஒருவரின் உள்ளார்ந்த தேடலின் ஒரு பகுதி என்பதை உணர்த்துகிறது. புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய அனுபவங்கள் மூலம் நாம் நம்மைப் புதுப்பித்துக்கொள்ள முடியும் என்பதை அஜித்தின் கதை நமக்குச் சொல்கிறது.