
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல் திரைத் துறைக்குள் நுழைந்து, தற்போது மிகப்பெரும் நடிகராக உருவாகி இருக்கிறார் அஜித். இவருடைய வெற்றி தோல்வி கணக்கை எடுத்துப் பார்த்தால் அதில் வெற்றிப் படங்கள் குறைவு தான். இருப்பினும் ரசிகர்கள் அஜித்தைக் கொண்டாட காரணமே இவரது தன்னடக்கம் தான். சமீபத்தில் வாழ்க்கையை தான் எப்படி வாழ விரும்புகிறேன் என்பதைப் பற்றி மனம் திறந்தார் அஜித்.
தனது வாழ்வின் ஒரு நொடியைக் கூட வீணடிக்க விரும்பவில்லை என அஜித் சமீபத்தில் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
“மக்கள் பலரும் தங்களுக்கு கிடைத்த வாழ்க்கையைப் பற்றி குறை கூறுகின்றனர். ஆனால் இரவில் தூங்கி காலையில் எழுந்திருப்பதே ஒரு வரம் தான். நான் என் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் உபயோகமான முறையில் பயன்படுத்தவே விரும்புகிறேன். சினிமா மற்றும் ரேஸிங்கில் இருந்து ஓய்வு பெறும் முடிவை என்னால் எடுக்க முடியாது. ஆனால், அதற்கான கட்டாயம் ஏற்படலாம்.
எனக்கு பல விபத்துகளும், அறுவை சிகிச்சைகளும் நடந்துள்ளன. இத்தனையையும் மீறி நான் உங்கள் முன் நிற்கிறேன். அனைவருக்குமே வாழ்க்கை மிகவும் மதிப்புமிக்கது. நாம் வீணடிக்கும் ஒரு நொடி கூட, நமக்கான வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கலாம். எனக்கான நேரம் வரும் சமயத்தில், என்னைப் படைத்தவன் எனை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். 'இந்த ஆத்மாவிற்கு நான் ஒரு வாழ்க்கையைக் கொடுத்தேன். அதனை மிகவும் பயனுள்ளதாக மற்றும் நேர்மறையான வழியில் வாழ்ந்துள்ளான்' என படைத்தவன் பெருமையாக நினைக்க வேண்டும். அப்படி ஒரு வாழ்க்கையைத் தான் நான் வாழ விரும்புகிறேன்.
சினிமா எப்போதும் என்னுடைய தேர்வாக இருந்ததே இல்லை. ரேஸிங்கில் பங்கேற்பதற்காகவே, மாடலிங் துறையில் நுழைந்தேன். அதன்பிறகு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. அச்சமயம் 'சினிமா நம் குடும்பத்திற்கு ஒத்து வராது. ஆகையால் சிந்தித்து முடிவெடு' என பெற்றோர் தெரிவித்தனர். ஆனால் அந்த சமயம் எனக்கு வேறு வழியில்லை. கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன். வாய்ப்புகளை தவற விடுவது மிகப் பெரிய தவறு,” என்றார்.
தற்போது சினிமாவில் நடித்துக் கொண்டே, ரேஸிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். பிடித்ததைச் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பதையும் அவர் நிரூபித்துள்ளார். ரேஸிங்கில் பங்கேற்கும் போது சினிமா ஷூட்டிங்கையும் தவிர்த்து வருகிறார். அதே நேரத்தில் தனக்கு பிடித்ததை இந்நாள் வரையிலும் கைவிடாமல், அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவது மிகப்பெரிய விஷயம் அல்லவா!