
சினிமாவைப் பொறுத்தவரை அந்தந்த காலகட்டத்தில் சிறந்த 2 நடிகர்களை ஒப்பிட்டு பேசுவது வழக்கமான ஒன்று. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழி சினிமாக்களிலும் இந்த கலாச்சாரம் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் மற்றும் விஜய் - அஜித் என சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் தொடர்ந்தது. ஆனால் இனி அப்படி இருக்கப் போவதில்லை என பிரபல நடிகர் கூறியுள்ளார். இதற்கு காரணம் என்ன என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமீப காலமாக மாஸ் ஹீரோக்களின் படங்கள் வசூலைக் குவிக்கத் தடுமாறி வருகின்றன. அதேநேரம் புதுமுக நடிகர்கள் நடிக்கும் சிறு பட்ஜெட் படங்கள், ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுகின்றன. இதற்கு முக்கிய காரணமே நல்ல கதைதான். இதுதான் மாஸ் ஹீரோக்களின் இன்றைய காலத்துப் படங்களில் இல்லாமல் போகிறது.
ஒரு படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தால் தான் சிறப்பான படமாக கருதப்படும். ஆனால் மாஸ் ஹீரோக்களின் படங்கள் வசூலில் அசலை ஈடுகட்டினாலும், விமர்சன ரீதியாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் போவதே, படத்தின் தோல்விக்கு காரணமாக அமைகிறது. எம்ஜிஆர் - சிவாஜி காலகட்டத்தில் கதைக்கும், நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பட்ஜெட் இரண்டாம் பட்சம் தான். இதே காலகட்டத்தில் பல நடிகர்கள் வெள்ளித்திரைக்கு வந்தாலும், எம்ஜிஆர் - சிவாஜி தான் மேலோங்கி இருந்தனர்.
இவர்களுக்குப் பிறகு வந்த ரஜினி - கமல், விஜய் - அஜித் என இந்தப் பட்டியல் தொடர்ந்தாலும், இனி வரப்போகும் காலங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தாது என நடிகர் ஷ்யாம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இன்றைய காலகட்டத்திற்கு மாஸ் ஹீரோக்கள் தேவையில்லை; நல்ல கதை தான் தேவை. ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்க்கின்றனர். சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் எல்லாம் விஜய் - அஜித்தோடு முடிந்து விட்டது. இன்று எண்ணற்ற நடிகர்கள் சினிமாவில் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். அந்த காலத்தில் ஹீரோ தான் மாஸாக இருந்தார். ஆனால் இன்றோ நல்ல கதைதான் மாஸ்” எனக் கூறினார்.
விஜய் - அஜித்திற்குப் பிறகு தனுஷ் - சிம்பு என்ற பெயர் ரசிகர்கள் மத்தியில் அடிபட்டாலும், பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனம். பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து கோடிக்கணக்கில் வசூல் ஈட்டுவதைக் காட்டிலும், நல்ல எதார்த்தமான கதைகளில் நடிக்க மாஸ் நடிகர்கள் முன்வர வேண்டும். எதார்த்தமான கதைகளில் பெரிய நடிகர்கள் நடிக்கும் பழக்கம் மலையாள சினிமாவில் தொடங்கி விட்டதை நாம் சமீபத்தில் பார்த்தோம். இது தமிழிலும் தொடர வேண்டும்.
கோலிவுட்டில் இயற்கை, அன்பே அன்பே, இன்பா மற்றும் லேசா லேசா போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் ஷ்யாம். இவர் தற்போது பட வாய்ப்பின்றி இருப்பதால், துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களால் தான் தனக்கான வாய்ப்பை இழந்ததாக சமீபத்தில் ஷ்யாம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.