
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், இந்தி சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருபவர் ரன்வீர் கபூர். இவர் மறைந்த பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகன் ஆவார்.
நடிகர் ரன்வீர் கபூர் 2007-ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலியின் சாவரியா மூலம் நடிகராக அறிமுகமானார். அறிமுகப்படம் தோல்வி படமாக அமைந்தாலும் அதனை தொடர்ந்து வந்த படங்கள் அவருக்கு ஓரளவு பெயரை பெற்றுத்தந்தது. 2012-ல் வெளியான ‘பர்ஃபி’ திரைப்படத்தில் காது கேளாத, வாய் பேச முடியாதவராக ரன்வீர் கபூரின் நடிப்பு அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றுத்தந்ததுடன், பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார்.
இவர் கடைசியாக நடித்து வெளியான ‘அனிமல்' படம் ‘ஹிட்' அடித்ததுடன், ரூ.1,000 கோடி வசூலை ஈட்டியது.
பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் நடித்த போது காதலித்த ரன்பீர் மற்றும் ஆலியா பட் 2022-ம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவரது மனைவி ஆலியா பட்டும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இருவருக்கும் ராகா என்ற பெண் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி மும்பையில் முக்கிய பகுதியாக திகழும் பாந்த்ராவில் 6 மாடி கொண்ட பிரமாண்ட வீட்டை கட்டியுள்ளனர். கடந்த சில வருடங்களாக இந்த வீட்டின் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், இப்போது வீடு தயார் நிலைக்கு வந்திருக்கிறது. ரூ.250 கோடியில் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட வீட்டில் விரைவில் ரன்பீர் கபூர் தனது குடும்பத்துடன் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆறு மாடி வீடு ஆடம்பரமான வீடாக மட்டுமல்லாமல், உணர்வுபூர்வமான ஆழ்ந்த குடும்ப உணர்வையும் கலந்து, தம்பதியினர் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் வரலாற்று சிறப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த பங்களா கபூர் குடும்பத்தின் ஆழமான உணர்ச்சியின் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. முதலில் புகழ்பெற்ற ராஜ் கபூர் மற்றும் கிருஷ்ணா ராஜ் கபூர் ஆகியோருக்குச் சொந்தமான இந்த சொத்து பின்னர் 1980-களில் அவரது மகனான ரிஷி கபூர் மற்றும் நீது கபூருக்கு வழங்கப்பட்டது.
இப்போது, அந்த குடும்பத்தின் அடுத்த 3-வது தலைமுறையான ரன்பீர் மற்றும் ஆலியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குடும்பத்தின் புதிய அத்தியாயத்தில் தொடரும் ஒரு தலைமுறை மரபைக் குறிக்கிறது.
புதிய வீட்டில் குடியேற உள்ள ரன்வீர் கபூர்-அலியா பட் நட்சத்திர தம்பதியினருக்கு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
ரன்வீர் கபூர்-அலியா பட் இருவரும் விரைவில் சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் & வார் படத்தில் விக்கி கௌஷலுடன் இணைந்து நடிக்கவுள்ளனர். ரன்பீர் கபூர் தற்போது நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா-1' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்தாண்டு (2026) திரைக்கு வருகிறது. அதே நேரத்தில் ஆலியா பட் ஆல்பாவிலும் நடிக்கவுள்ளார்.