
2025-ம் ஆண்டுக்கான 78-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவில் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் கலந்து கொண்டு விதவிதமான ஆடைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வந்து அனைவரையும் கவருவார்கள். ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உலக பிரசித்தி பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்பிரலங்களான ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஜான்வி கபூர், ஆலியா பட், ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஆலியா பட்டின் சிவப்பு கம்பள அறிமுகமானது அவரது அற்புதமான உயர்-ஃபேஷன் தோற்றத்திற்காக மட்டுமல்லாமல், இந்தியாவுடனான அவரது வெளிப்படையான உரையாடலுக்காகவும் கவனத்தை ஈர்த்தது. இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஆலியா பட், லோரியலின் பிராண்ட் தூதர்களில் ஒருவராக அறிமுகமானார்.
புருட் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் யாருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, நடிகை ரோஷனைப் பாராட்டினார். நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள், நிறைய திறமைசாலிகளும் இருக்கிறார்கள். மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ரோஷன் மேத்யூவுடன் 'டார்லிங்ஸ்' படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவத்தையும் அவர் நினைவு கூர்ந்தார். ரோஷன் மேத்யூவுடன் இணைந்து பணியாற்றும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. நிச்சயமாக, அவர் ஒரு அற்புதமான நடிகர் என்றார். மேலும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ரோஷன் மேத்யூவுடன் ஏற்கனவே பணியாற்றியுள்ளதால், நடிகர் ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து நடிக்க ஆலியா பட் விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், மலையாள சினிமாவின் சக்திவாய்ந்த நடிகர் ஃபஹத் ஃபாசில் மீதான தனது அபிமானத்தை வெளிப்படுத்திய ஆலியா பட், தான் உண்மையிலேயே மதிக்கும் நடிகர்களில் ஃபஹத் ஃபாசிலும் ஒருவர் என்றார். 'ஆவேஷம்' படத்தில் அவரது நடிப்பைப் பாராட்டிய அவர், அவரை அருமையான நடிகர் என்றும், 'ஆவேஷம்' தனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று என்றும் கூறினார்.
2012-ம் ஆண்டு பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளரான கரண் ஜோஹர் இயக்கிய ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அலியா பட். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தன்னை பாலிவுட் சினிமாவின் முன்னனி நடிகையாக அறிமுகபடுத்திக்கொண்டார். ராஜமெளலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்திருந்த அலியா பட், அந்த படத்தில் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.