

பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள திரைப்படம் துரந்தர். 'தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமின் மகளாக நடித்து அனைவரின் கவனம் ஈர்த்த சாரா அர்ஜுன் ‘துரந்தர்’ இந்த படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருப்பதுடன், பாலிவுட் திரையுலகில் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
'உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' படத்தின் மூலம் கவனம் பெற்ற பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாஸ்வத் சச்தேவ் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது மற்றும் வன்முறை காரணமாக சில காட்சிகள் நீக்கவும் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5-ம்தேதி உலகளவில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பை பெற்று வரும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மூன்றாவது வாரமும் வெற்றிநடைபோட்டு வருகிறது.
பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், இந்து - முஸ்லிம் பிரச்னை தூண்டுவதாக வெளியான விமர்சனத்தால் 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூல் சாதனையும் படைத்து வருகிறது.
அதன்படி இப்படம் ரிலீஸ் ஆகி 17 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 870 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ரூ.855 கோடி வசூல் செய்து, இந்த ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய படமாக இருந்த காந்தாரா சாப்டர் 1-ன் சாதனையை முறியடித்துள்ளது.
இதன் மூலம் 2025-ம் ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய இந்திய திரைப்படம் என்ற மகுடத்தை காந்தாரா சாப்டர் 1ஐ பின்னிக்கு தள்ளி ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படம் பிடித்துள்ளது.
அதுமட்டுமின்றி, ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல்' படத்தின் வாழ்நாள் வசூலையும் துரந்தர் முறியடித்துள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் அனிமல் படத்தின் வாழ்நாள் வசூல் ரூ.553 கோடியாகும்.
‘துரந்தர்’ படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது.