

அல்லு அர்ஜுன் நடிப்பில் இந்திய அளவில் மிகப்பெரிய திரைப்படமாக ' ராக்கா' உருவாகி வருகிறது. புஷ்பா- 2 திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் தேசிய அளவில் அல்லு அர்ஜுனின் மதிப்பும் உயர்ந்து உள்ளது. புஷ்பா- 3 ஆம் பாகத்திற்கு முன்னர் அல்லு அர்ஜுன் 'ராக்கா ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஹாலிவுட் பாணியில் அறிவியல் புனைவு திரைக்கதைக் களத்தில் அட்லீ எடுத்து வருகிறார்.
இதற்கு முன் ஹாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய 'ஜவான்' திரைப்படம் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஷாருக்கான் திரைப்பட வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் , அவரது இரண்டாவது 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் திரைப்படமாகவும் உள்ளது. இந்த வெற்றிக்கு பின்னர் அல்லு அர்ஜுனை நெருங்குவது அட்லிக்கு எளிதானது. இவர்களின் கூட்டணியை விட திரைப்படத்தின் கதைக்களம் என்ன? என்பது தான் , படத்தின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பினை அதிகமாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதால் , திரைப்படத்தின் பட்ஜெட் தாறுமாறாக தான் இருக்கும். இந்த திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக மட்டுமல்லாமல் , சர்வதேச அளவில் வசூலை குவிக்கும் திரைப்படமாக மாற்ற தயாரிப்பு நிறுவனம் முயன்று வருகிறது.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களின் பட்ஜெட்டை விட பல மடங்கு லாபத்தினை எப்போதும் குறி வைக்கக் கூடியது.
இந்த திரைப்படத்தில் வில்லனாக பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிக்க உள்ளதாக பரவி வரும் தகவல் தான் , பாலிவுட் மற்றும் டோலிவுட்டின் ஹாட் டாபிக்காக உள்ளது. வில் ஸ்மித் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருகிறார். ஒரு கட்டத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டாராக மாறி உலகின் அதிக சம்பளம் பெறும் நடிகராக நீண்ட காலம் இருந்துள்ளார். அதிரடி ஆக்சன் கதைகளில் மட்டுமல்லாமல் , உணர்வுப் பூர்வமான கதைகளில் நடிக்கும் , ஹாலிவுட்டில் உள்ள ஒரு சில நடிகர்களில் ஸ்மித்தும் ஒருவர். குடும்பம் மற்றும் தனிநபரின் வாழ்க்கை தொடர்பான கதைகளில் நடித்து ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார்.
வில் ஸ்மித்தை ' ராக்கா' திரைப்படத்தில் நடிக்க வைப்பதன் மூலம் படத்தின் வியாபாரத்தினை சர்வதேச அளவில் உயர்த்த முடியும் . அவருக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களும் இருப்பது படத்திற்கு அதிக விளம்பரத்தையும் கொடுக்கும். பாலிவுட் நிகழ்ச்சிகளில் பல முறை வில் ஸ்மித் கலந்து கொண்டுள்ளார். அமிதாப் பச்சன், ஷாருக் கான் , சல்மான் கான் , அக்ஷய் குமார் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நடிகர்களுடன் நட்பிலும் அவர் இருக்கிறார். பாலிவுட் திரைப்படங்களில் வில் ஸ்மித்தை கவுரவ வேடத்தில் நடிக்க வைக்க ஒரு சில முயற்சிகள் நடந்தும் கை கூட வில்லை.
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானையும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் ராக்காவில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ளதால் அவர் கட்டாயம் இந்த திரைப்படத்தில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். அத்துடன் ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.