

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனரான சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் புஷ்பா. புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது. இந்த படம் உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா 2: தி ரூல்’ மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு கொண்டு வந்தனர்.
இந்த படத்தினை சுகுமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. அல்லு அர்ஜுன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ராஷ்மிகா மந்தனா, வில்லனாக பகத் பாசில், ஜெகபதி பாபு, தனஞ்சயா, ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார்.
அல்லு அர்ஜுனின் அட்டகாரசமான நடிப்பு, ராஷ்மிகாவின் ஆளை மயக்கும் கவர்ச்சியோடு, அதோடு அல்லு அர்ஜுன் சண்டை காட்சிகள் என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதுடைய மக்களும் ரசிக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.
புஷ்பா 2 ரிலீஸ் ஆன முதல் நாளே உலகளவில் ரூ.294 கோடிக்கு மேல் வசூலான நிலையில், இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இந்த படத்தின் சிறப்பு காட்சியின் போது பெண் மரணம், அல்லு அர்ஜுன் கைது, சிறை வாசம், ஆந்திர முதல்வர் குற்றச்சாட்டு, மற்றும் பல்வேறு விமர்சனங்களை தவிடு பொடியாக்கி புஷ்பா 2 வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலுமே வசூலில் சாதனை படைத்தது.
இந்த நிலையில், அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கி வெளியாகி ஹிட்டான `‘புஷ்பா 2’ திரைப்படம் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு வரும் 2026 ஜனவரி 16-ம்தேதி ஜப்பானில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கீக் பிக்சர்ஸ் இந்தியா நிறுவனம் விநியோகிக்கும் இந்தப் படத்தின் ஜப்பானிய மொழி டிரைலரை படக்குழு நேற்று(டிசம்பர் 3-ம்தேதி) வெளியிட்டுள்ளது.