25 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கிய நடிகர்… அவரே கூறிய சுவாரசிய சம்பவம்!

Cinema Actors
Cinema Actors

பல ஆயிரம் முதல் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு மத்தியில், தனது முதல் சம்பளம் 25ரூ தான் என்று கூறியிருக்கிறார், நடிகரும், டப்பிங் ஆர்டிஸ்ட்டுமான எம்.எஸ்.பாஸ்கர்.

நாடக நடிகராக தன்னுடைய கலைப் பயணத்தை தொடங்கிய பாஸ்கர், விசுவின் திருமதி ஒரு வெகுமதி படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார். பின்னர் சில படங்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் நடித்து வந்தார். 1990லிருந்தே நடித்து வரும் இவர் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்டும் கூட.

இவர் எந்தக் கதாபாத்திரங்களுக்கெல்லாம், குரல் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்தால், நீங்கள் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.

ஆங்கில பிரம்மாண்ட படங்களான ஜுராசிக் பார்க், ஸ்பைடர் மேன், ஷஷாங்க் ரிடம்ஷன், பேட் பாய்ஸ் 1&2, போன்ற படங்களின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

அதேபோல், இந்தியாவின் பிற மொழி படங்களுக்கும் தமிழில் குரல் கொடுத்துள்ளார். சீதா ராமம், குஷி, நரசிம்மா போன்ற ஹிட் படங்களுக்கும் டப் செய்திருக்கிறார். இவர் அதிகப்படியாக தெலுங்கு நடிகரான பிரம்மானந்தம் அவர்களுக்கே தமிழ் மொழியில் குரல் கொடுத்துள்ளார்.

இப்படி நடிகரகாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் வலம் வரும் இவர், ஒரு சுவாரசிய நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

அதாவது முதன்முதலில் எப்படி டப்பிங் ஆர்டிஸ்ட்டாக அறிமுகமானீர்கள் என்ற கேள்விக்கான பதிலைதான் இவர் கூறியுள்ளார்.

எம்.எஸ்.பாஸ்கரின் சகோதரியான ஹேமா மாலினி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அப்போது இயக்குநர் ஒருவர், அவர் குரலைக் கேட்டு நீ டப்பிங் ஆர்டிஸ்ட்டாகிவிடு என்று கூறியிருக்கிறார். சில நாட்களில் ஹேமா மாலினி அவர்கள், ஒரு டப்பிங் செய்வதற்காக ஸ்டூடியோ சென்றிருக்கிறார். அவருடன் எம்.எஸ்.பாஸ்கரும் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில், வேறொரு சின்ன கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்பவர் வரவில்லை.

அப்போது அங்கிருந்த எம்.எஸ்.பாஸ்கரை அழைத்து பேச சொல்லியிருக்கிறார் இயக்குநர். அவர் ஒரே டேக்கில் வசனத்தைப் பேசி ஓகே வாங்கியிருக்கிறார். இது இயக்குநர் உட்பட அங்குள்ள அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இயக்குநர் அவரை அழைத்து கேட்டபோது, எம்.எஸ்.பாஸ்கர் கூறியிருக்கிறார், “இங்கு வரும்போதெல்லாம் ஒவ்வொரு வசனத்தையும் நீங்கள் சொல்ல சொல்ல மனதில் சொல்லிப் பார்ப்பேன். அதனால்தான் என்னவோ ஒரே டேக்கில் முடித்துவிட்டேன்.” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
மாஸ் வெற்றி பெற்ற சூரி கருடன்... ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது?
Cinema Actors

அதற்கு இயக்குநர் நீ வரும் காலத்தில் பெரிய டப்பிங் ஆர்டிஸ்ட்டாக வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி போகும்போது சம்பளமாக, இரண்டு 10ரூ நோட்டுகளும், ஒரு 5 ரூபாய் நோட்டும் கொடுத்திருக்கிறார். இதுதான் தன்னுடைய முதல் சம்பளம் என்று கூறி நெகிழ்ச்சியடைந்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com