படத்துல பயங்கரமான வில்லன்! ஆனால் நிஜத்துல...?

Villain Actor Anand Raj
Tamil Actor
Published on

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் பலரும், நிஜ வாழ்க்கையில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அதேபோல் எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமல் இருக்கின்றனர். அவ்வகையில் திரைப்படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்தவர் ஆனந்த் ராஜ். ஆனால் நிஜத்தில் இவர் எந்தவித கெட்டப் பழக்கமும் இல்லாதவர் என்பது பலரும் அறியாத உண்மை. தனது உடல் ஆரோக்கிய ரகசியம் பற்றி சமீபத்தில் மனம் திறந்த ஆனந்த் ராஜ், என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

புதுச்சேரியில் பிறந்து, தமிழ் சினிமாவில் வில்லன் வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் ஆனந்த் ராஜ். இது தவிர சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளத்தில் படங்களிலும் நடித்திருக்கிறார்.

1988 ஆம் ஆண்டு ஒருவர் வாழும் ஆலயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் ஆனந்த் ராஜ். அதன்பிறகு புலன் விசாரணை, மாநகர காவல், பரதன், பாட்ஷா, செங்கோட்டை, மூவேந்தர், சிம்மராசி, சூரிய வம்சம், பாட்டாளி மற்றும் கிரி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து, தமிழ் சினிமாவின் முக்கியமான வில்லனாக உருவெடுத்தார். வில்லனாக நடித்து மிரட்டியவர், கடந்த சில ஆண்டுகளாக காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை திறம்பட கையாண்டதன் மூலமாகவே, இன்று தமிழ்த் திரையுலகில் நிலைத்து நிற்கிறார்.

ஆனந்த் ராஜ் ஒரு காவல்துறை அதிகாரியாக வலம் வர வேண்டும் என அவரது தாயார் விரும்பினார். ஆனால், தனக்கு சினிமா மீது தான் ஈர்ப்பு என ஆனந்த் ராஜ் கூறியதும், அதனை மறுக்காமல் அவரது ஆசைக்கு பச்சைக்கொடி காட்டினார். பிறகு சென்னையில் திரைப்படப் பயிற்சி மேற்கொள்வதற்காக படிப்பில் சேர்ந்தார். அப்போது கன்னட நடிகரான சிவராஜ் குமார், ஆனந்த் ராஜூடன் ஒரே வகுப்பில் பயின்றார்.

வில்லனாக மிரட்டியவர் முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் காமெடி நடிகராக உருவெடுத்தார். அதன்பிறகு கதாநாயகன், மரகத நாணயம், 80’s பில்டப் மற்றும் டிக்கிலோனா உள்ளிட்ட பல படங்களில் காமெடி கலந்த வில்லனாக நடித்து அசத்தினார்.

இதையும் படியுங்கள்:
குணச்சித்திர நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் மதிப்பே இல்லையா?
Villain Actor Anand Raj

என்னதான் திரையில் வில்லனாக தோன்றினாலும், நிஜத்தில் எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவர் ஆனந்த் ராஜ். 'அதனால்தான் இன்று வரையிலும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்' என சமீபத்தில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பல படங்களில் மிகவும் மோசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் சிகரெட், சரக்கு என எந்தக் கெட்டப் பழக்கமும் எனக்கு இல்லை. இதனால் தான் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். சினிமா வேறு; வாழ்க்கை வேறு. ஆரோக்கியத்துடன் இருந்தால் தானே, அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடியும்” என்றார்.

பொதுவாக அனைத்து மொழித் திரைப்படங்களிலும் ஹீரோக்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, வில்லன் நடிகர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்கள் அதனை எதிர்ப்பார்ப்பதும் இல்லை. தமது நடிப்புக்கான அங்கீகாரத்தை மட்டுமே அனைத்து நடிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com