
திரைப்படங்களைப் பொறுத்தவரையில் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். கதை முழுக்க முழுக்க கதாநாயகர்களைச் சுற்றியே இருக்கும் என்பதால், குணச்சித்திர நடிகர்களின் பெயர்கள் அவ்வளவாக பேசப்படாது. இருப்பினும் இவர்களும் படத்தின் ஒரு அங்கம் தான் என்பதை மறக்கக் கூடாது. கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளுக்கு கிடைக்கின்ற மதிப்பும், மரியாதையும் குணச்சித்திர நடிகர்களுக்கு கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அவ்வகையில் குணச்சித்திர நடிகர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது இந்தப் பதிவு.
ஒரு படத்தில் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் அனைத்து நடிகர்களுமே, தங்களது அயராத உழைப்பைக் கொடுக்கின்றனர். தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும், குணச்சித்திர நடிகர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இருப்பினும் அவர்களுக்கான மரியாதை கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. சினிமாவில் ஏன் இந்த பாரபட்சம்? இதற்கான உண்மையான காரணத்தை சினிமாத் துறையில் கண்டறிவது கடினம் தான். இருப்பினும், கதாநாயகர்களை மட்டும் கொண்டாடும் ரசிகர்கள் தான் இதற்கு காரணமா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. ஏனெனில் குணச்சித்திர நடிகர்களை ரசிகர்கள் யாரும் கொண்டாடுவதில்லையே!
குணச்சித்திர நடிகர்கள் என்றாலே ஏளனமான பார்வை தான் இருக்கிறது. ஆனால், படத்தில் முக்கியத் திருப்புமுனையாக இருப்பதும் இவர்கள் தான் என்பதை மறந்து விடக் கூடாது. பொதுவாக சினிமா விருது வழங்கும் விழாவிற்கு உச்ச நட்சத்திரங்களைத் தான் அதிகளவில் அழைப்பார்கள். இம்மாதிரியான நேரங்களில் குணச்சித்திர நடிகர்களை அழைப்பது மிகவும் குறைவு தான். சமீபத்தில் மறைந்த குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ், இதுபற்றிய தனது ஆதங்கத்தை ஏற்கனவே ஒருசமயம் தெரிவித்திருந்தார்.
அவர் கூறுகையில், “எந்த விருது வழங்கும் விழாவிற்கும் என்னை யாருமே அழைத்ததில்லை. யாரும் எனக்கு எந்த விருதையும் கொடுத்ததும் இல்லை. நான் வெளிப்படையாக சொல்வது ஒன்று தான். தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களுக்கு மதிப்பும் இல்லை; மரியாதையும் இல்லை” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் டெல்லி கணேஷ்.
1976 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரதேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் டெல்லி கணேஷ். இதுவரை சுமார் 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். 1964 முதல் 1974 வரை சுமார் 10 ஆண்டுகள் இந்திய விமானப் படையில் பணிபுரிந்த கணேஷ், டெல்லியில் தட்சிண பாரத நாடக சபா நடத்திய நாடகங்களில் நடித்து தான், சினிமா துறைக்குள் நுழைந்தார்.
கோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகர்கள் எங்கு சென்றாலும் மதிப்பும், மரியாதையும் கிடைக்கிறது. ஆனால், சினிமா ஒன்றையே வாழ்வாதாரமாக நம்பி வாழும் குணச்சித்திர நடிகர்களுக்கு, சினிமா துறையிலேயே மதிப்பு கிடைக்காதது வருத்தம் தான். கதாநாயகர்களால் மட்டுமே ஒரு படம் வெற்றி அடைவதில்லை. அதற்கு பல பேருடைய உழைப்பு காரணமாக இருக்கிறது. திரையிலும் சரி; திரைக்குப் பின்னாலும் சரி, பல கலைஞர்கள் படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், படம் வெற்றி பெற்றால் அதற்கான மொத்த வரவேற்பும் கதாநாயகர்களுக்கு மட்டுமே கிடைப்பது வழக்கமாகி விட்டது. இனியாவது சினிமா துறையில் குணச்சித்திர நடிகர்களுக்கான அங்கீகாரம் கிடைக்குமா என்பது விடையறியா கேள்வி தான்!