விமர்சனம்: அனந்தா - அற்புதமான அனுபவங்களை அழகாகச் சொல்லும் ஆனந்த அனுபவம்!
ரேட்டிங்(3.5 / 5)
மனித குலத்திற்கு செய்யும் சேவை மூலம் இறைவனை அடைய முடியும் என்று வாழ்ந்து காட்டி உணர்த்தி முக்தி அடைந்தவர் பகவான் புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்கள்.
பாபாவிற்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளார்கள். ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த சமயத்தில், பாபாவின் பக்தர்கள் பாபா தங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை சொல்லும் படமாக வந்துள்ளது 'அனந்தா'.
பாட்ஷா, சத்யா போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி உள்ளார். சுகாசினி, நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.
நிழல்கள் ரவி புட்டபர்த்திக்கு ஐந்து சாய் பாபா பக்தர்களை வரவழைத்து பாபா அவர்களின் வாழ்க்கையில் நிகழ்திய அற்புத அனுபவங்களை பேச சொல்கிறார்.
அனுபவம் 1:
ஜெகபதி பாபு பெரும் பணக்காரர். ஒரு முறை வங்கிக்கு செல்லும் போது அங்கே ஒரு கொள்ளை சம்பவம் நடக்கிறது. அதை தடுக்க முயல்கிறார். முடியவில்லை. அங்கே உள்ள ஒரு பாபா புகைப்படம் இவரிடம் பேசுவது போல் இருக்கிறது. அந்த தைரியத்தில் கொள்ளையர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அசம்பாவிதத்தை தடுகிறார்.
அனுபவம் 2:
அபிராமி வெங்கடாசலம் நாட்டிய கலைஞர். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சில நிமிடஙகள் முன்பு அபிராமிக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போகிறது. அப்பா தலைவாசல் விஜய் பாபாவை திட்ட, மகள் அபிராமி பாபாவை மனம் உருகி பிரார்த்திக்கிறார். சில நிமிடங்களில் பாபாவின் அருளால் கால் குணம் பெற்று நடனம் ஆடுகிறார் அபிராமி.
அனுபவம் 3:
Y.G. மகேந்திரனும் ரஞ்சினியும் தீவிர பாபா பக்தர்கள். மனைவி ரஞ்சினி எதிர்பாராமல் இறந்து விட, Y.G. பாபாவின் மீது தீராத கோபத்தில் இருக்கிறார். மருத்துவர் ஒருவர் அழைப்பின் பெயரில் வேண்டா வெறுப்பாக புட்டபர்தி செல்கிறார். அங்கே மனைவி இறந்தது கூட பாபா செய்த நன்மையே என்று புரிந்து கொள்கிறார். புட்டபர்தியிலேயே தங்கி பாபா புகழ் பரப்புகிறார்.
அனுபவம் 4:
தீவிர பாபா பக்தையாக இருக்கும் சுகாசினிக்கு ஒரே மகன் கங்கை ஆற்றில் விழுந்து விடுகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மகனை பிழைக்க வைக்க முடியாது என மருத்துவர்கள் கை விரித்து விடுகிறார்கள். சுகாசினி பாபாவிடம் சரணாகதி அடைகிறார். பாபா மருத்துவராக வந்து மகனை காப்பாறுகிறார்.
அனுபவம் 5:
அமெரிக்காவில் வசிக்கும் வெள்ளைகார தம்பதிகள் வசிக்கும் வீட்டை சுற்றி காட்டு தீ பரவுகிறது. இருவரும் பாபாவை பிராத்தனை செய்கிறார்கள். தீயின் நாக்கங்கள் இவர்களது வீட்டை மட்டும் தீண்டாமல் செல்கிறது.
இப்படி ஐந்து விதமான அனுபங்களை ஐந்து பக்தர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த ஐந்து வித கதைகளும் சிறப்பாக இருந்தாலும், சுகாசினி, Y.G. மகேந்திரன் இருவரும் வரும் பகுதிகள் மிக சிறப்பாக உள்ளன. மற்ற மூன்று கதைகளை விட இந்த இரண்டு கதைகளும் உணர்வு பூர்வமாகவும், எமோஷனலாகவும் நம்மால் கனக்ட் செய்து கொள்ள முடிகிறது.
"இது பாபா தந்த குழந்தை. பாபா எடுத்து கிட்டா நான் வருத்த பட மாட்டேன்" என்று சுகாசினி சொல்லும் இடத்தில் பக்திக்கும் தாய் பாசத்திற்கும் இடையே உள்ள போராட்டத்தை நடிப்பில் தத்ரூபமாக தந்துள்ளார்.
தன் மனைவி இறந்த பிறகு "நீயெல்லாம் ஒரு தெய்வமா?" என பாபாவை திட்டும் போது நடிப்பில் உணர்ச்சி பிழம்பாக இருக்கிறார் Y.G.மஹேந்திரன்.
ட்விஸ்ட், வேகமான திரைக்கதை எல்லாம் தேவை இல்லை ஒரு தெய்வீக அனுபவத்தை தந்தால் போதும் என முடிவு செய்து, வெற்றி பெற்று இருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. தேவாவின் இசை இந்த அனுபவத்திற்கு கை கோர்த்திருக்கிறது. கதைக்கு தேவைப்படும் இடத்தில் சாய்பாபாவின் ஒரிஜினல் வீடியோ footage இணைத்து இருப்பது சபாஷ் போட வைக்கிறது.
பக்திப் பாதையில் சரணாகதியின் முக்கியத்துவத்தை உணர்த்தி உள்ளது படம். பாபாவின் பக்தர்கள் மட்டுமில்லாமல் அனைத்து ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும் அனந்தா கண்டிப்பாக பிடிக்கும்.
இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

