குறைந்த பட்ஜெட்.. நிறைந்த சுவாரசியம்! 'TTT' - திரைக்கதை ஜாலம்..!

Cinema review
Cinema review in tamil
Published on

ரிரு லொகேஷன்களில் மட்டுமே படத்தின் கதையை நகர்த்தி படத்தை சுவராசியமாக தருவதில் திறமை சாலிகள் மலையாள டைரக்டர்கள். இதுபோன்று ஒரு குறிப்பிட்ட சில லொகேஷன்களில் நடக்கும் ஒரு சம்பவத்தை பின்புலமாகக் கொண்டு TTT  (தலைவர் தம்பி தலைமையில்) என்ற படத்தை தந்துள்ளார் நிதிஷ் சகாதேவ். ஜீவா, தம்பி ராமையா, இளவரசு நடிப்பில் வெளிவந்துள்ள படம் TTT. நிதிஷ் கடந்த 2023 ஆம் ஆண்டு மலையாளத்தில்  Falimy என்ற வெற்றி படத்தை  இயக்கி உள்ளார். TTT படத்தின் கதையை நிதிஷ் முதலில்  மம்முட்டியிடம் சொல்லி உள்ளார். மம்முட்டிக்கு  கால்ஷீட் ஒதுக்க நேரம் இல்லாததால் இந்த கதையை தமிழில் தந்துள்ளார் நிதிஷ்.

தென் தமிழகத்தில் உள்ள சிறிய கிராமம். அங்கே  தம்பி ராமையா, இளவரசு இருவரின் வீடுகளும் அருகருகில் உள்ளன. இருவரும் ஒரு கடந்த கால பிரச்னையால் கீரியும், பாம்புமாக இருக்கிறார்கள். இளவரசு மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகிறது.

இளவரசு தனது மகளின் திருமணத்தை தன் வீட்டின் முன் நடத்த விருப்பப்பட்டு ஏற்பாடுகளை செய்கிறார். விடிஞ்சா கல்யாணம். வீட்டின் முன் கல்யாணத்துக்கு மைக் செட் ஆடல் பாடல் என இளவரசு வீடு கல்யாண களையில் இருக்கிறது. எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டில் இருக்கும் தம்பி ராமையாவின் வயதான அப்பா இறந்துவிடுகிறார்.

அப்பாவின் இறுதி ஊர்வலத்தை தாரை, தப்பட்டையுடன் நடத்த முடிவு செய்கிறார் தம்பி ராமையா. இதனால் இவருக்கும் பக்கத்து வீட்டில் இருக்கும் இளவரசுக்கும் பிரச்னை வெடிக்கிறது. இவர்களை சமாதானப்படுத்த பாஞ்சாயத்து தலைவராக இருக்கும் ஜீவா வருகிறார். இவராலும் இருவரையும் சமாதானப்படுத்த முடியவில்லை. இருவரின் உறவினர்களும் இரண்டு தரப்பினராக பிரிந்து அடித்து கொள்கிறார்கள். ஜெயித்தது கல்யாண வீடா? அல்லது சாவு வீடா? என்ற முடிவை சொல்கிறது TTT.

இதையும் படியுங்கள்:
ஹாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுத்த தமிழ் படம்! உலக அளவில் 6-வது இடத்தைப் பிடித்த தமிழ் படம்..!
Cinema review

ஹீரோ  வழியாக மட்டுமல்லாமல் சம்பவத்தின் போது வரும் மாந்தர்கள் வழியாகவும் கதை நகர்கிறது. ஜீவாவின் போட்டி அரசியல் வாதியாக வரும் இளைஞர்,  கல்யாண மாப்பிள்ளை, மாப்பிள்ளை தோழர் போன்றவர்களின் வழியேயும் கதை நகர்கிறது. மாப்பிள்ளை, மாப்பிள்ளை தோழனும் கன்னியாகுமரி தமிழில்  சிறப்பாக  பேசி  சபாஷ் போட வைக்கிறார்கள்.  இரண்டு மணி நேரம் மட்டுமே ரன்னிங் டைம் கொண்ட இந்த படத்தில் படம் தொடங்கி இரண்டாம்  காட்சி யிலிருந்து கதைக்குள் வந்து விடுகிறது.  படத்தின் அனைத்து காட்சிகளும் இரண்டு வீடுகளில் ஒரு இரவில் நடப்பதாக இருக்கிறது. திரைக்கதையின் பலத்தால் படம் சுவாரசியமாக இருக்கிறது. இருந்தாலும் கிளைமாக்ஸ் சற்று நீளமாக இருப்பதை தவிர்திருக்கலாம்.

ஜீவா ஆக்ஷன் செய்யாமல், ஆர்ப்பாட்டம் செய்யாமல் கதைக்கு தேவையான அளவில் அளவோடு நடித்துள்ளார். ஒரு இடைவெளிக்கு பின் ஒரு சரியான கதையில் நடித்துள்ளார் ஜீவா. நடிப்பில் அனைவரையும்  தூக்கி சாப்பிட்டுவிடுவது தம்பி ராமையாதான். குறிப்பாக சாமி வந்து ஆடும் காட்சியில் பலே சொல்ல வைக்கிறார்.

விஷ்ணு விஜய் பின்னணி இசையில் மட்டும் சற்று 'மலையாள'  வாசனை தெரிகிறது.  இந்த வருட பொங்கல் ரேஸில் தனிமனித ஈகோ என்ற ஒன் லைனில் வித்தியாசமான திரைக்கதையில் ஜெயித்து இருக்கிறது TTT. TTT சேட்டன் (மலையாள டைரக்டர் நிதிஷ்) தந்த தமிழ் திரை பொங்கல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com