விமர்சனம்: அந்த 7 நாட்கள் - அன்று... ஓஹோ! இன்று... ஐயோ!
ரேட்டிங்(2 / 5)
கடந்த 1981 ஆம் ஆண்டு கே. பாக்யராஜ் இயக்கி கதாநாயகனாக நடித்து அந்த ஏழு நாட்கள் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு பின் இன்றளவும் அந்த ஏழு நாட்கள் தொலைக்காட்சியில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் படமாக இருக்கிறது.
அந்த ஏழு நாட்கள் என்ற இதே டைட்டிலை பயன்படுத்தி M. சுந்தர் புதிய படம் ஒன்றை இயக்கி உள்ளார். இந்த டைட்டிலை தந்த நன்றிக்காக பாக்யராஜை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 26 அன்று திரைக்கு வர உள்ளது. அஜி தேஜ் , ஸ்ரீ ஸ்வேதா ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ளார்கள்.
ஹீரோ அஜி தேஜ், வானியல் தொடர்பான படிப்பை படிக்கிறார். சில நூற்றாண்டுகளுக்கு முன்னதான தொலைநோக்கி (Telescope) ஒன்று அஜிக்கு கிடைக்கிறது. இதை பயன் படுத்தும் போது ஒரு வித பவர் அஜிக்கு கிடைக்கிறது. அதாவது இவர் ஒருவரை பார்த்தாலே, பார்க்கப்படும் நபர் எப்போது இறப்பார் என்று அறிந்து கொள்கிறார். தன்னை காதலிக்கும் ஸ்ரீ ஸ்வேதா சில நாட்களில் இறந்து விடுவார் என்று தெரிந்து விடுகிறது. இதன் நடுவே இவர்களின் காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்புகிறது. இதனால் இருவரும் கொடைக்கானல் சென்று பதுங்கி கொள்கிறார்கள். அங்கே ஒரு சில நாளில் ஸ்வேதாவிற்கு நாய் கடித்ததால் ரேபிஸ் தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து, இன்னும் ஏழு நாட்களில் ஸ்வேதா இறந்து விடுவார் என்று சொல்கிறார்கள். அலோபதி மருத்துவர்கள் கை விட்டதால் வேறு வழியில்லாமல் காதலியை காப்பாற்ற நாட்டு மருந்தை நாடுகிறார் காதலர். ரேபிஸை குணப்படுத்த நாட்டு மருந்து கிடைத்ததா என்று சொல்கிறது மீதி கதை!
Made for each other என்று சொல்வதை போல் அழகான இளம் காதல் ஜோடி, பெற்றோர் எதிர்ப்பு, கொஞ்சம் அமானுஷ்யம் என்று படம் நன்றாக நகர்ந்து கொண்டிருந்தது. "இதுவரைக்கும் நல்லாதான போய்கிட்டிருந்தது..." என்று வடிவேலு பாணியில் யோசிப்பதற்கு முன்பாக, திடீர் என நாய் கடிக்கு மருந்து என்று லாஜிக் இல்லாத காட்சிகளால் படம் தடம் மாறி சுவாரசியத்தை குறைத்துக் கொள்கிறது. ரேபிஸ்க்கு நாட்டு மருந்து என்று அறிவியலால் நிரூபிக்க படாத ஒரு விஷயத்தை தந்து குழப்ப முயற்சி செய்திருக்கிறார் டைரக்டர்.
படத்தில் பாராட்ட பட வேண்டிய ஒரே விஷயம் ஹீரோ - ஹீரோயின் இருவரின் நடிப்பையும் சொல்லலாம். ஒரு அரசியல்வாதியாக கச்சிதமாக நடித்திருக்கிறார் பாக்கியராஜ். பின்னணி இசை ஆஹா என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓகே என்று சொல்ல வைக்கிறது.
தமிழ்நாட்டில் சமீப காலத்தில் பல்வேறு இடங்களில் நாய் கடிக்கு ஆளோவோர் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் ரேபிஸ் தொற்றால் இறந்தும் போகிறார்கள். ஊடகங்களில் நாய் வளர்ப்பும், நாய் மனிதர்களை கடிப்பது பற்றியும் விவாதங்கள் பரபரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் படம் நன்றாக ஓடும் என்று இயக்குநர் நம்பிக்கை வைத்திருந்தால்... sorry sir எங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை!