
பிக்பாஸ் சீசன் 9 தொடங்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் பிக் பாஸுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக் பிரதர் என்கிற நிகழ்ச்சியைதான், இந்தியாவில் பிக் பாஸ் என்கிற பெயரில் பல மொழிகளில் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. எந்த சீசனுக்கும் இல்லாத வரவேற்பு கடந்த பிக் பாஸ் 8வது சீசனுக்கு இருந்தது. இந்த சீசனை புதிதாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதுவரை உள்ள 7 சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சிக்கு சரிபட்டு வரமாட்டார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்து போட்டியாளர்களிடம் எதையும் சுற்றி வளைத்து பேசாமல் தவறு என்று பட்டதை முகத்திற்கு நேராக அடித்து பேசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தியில் சல்மான் கானும், மலையாளத்தில் மோகன்லாலும், கன்னடத்தில் சுதீப்பும், தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
நிகழ்ச்சி நடக்கும் 100 நாட்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் வெளிஉலக தொடர்பிலிருந்து முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டு, கொடுக்கப்படும் பணிகளையும், டாஸ்க்குகளையும் சிறப்பாக நிறைவேற்றும் ஒருவரே, மக்கள் கொடுக்கும் வாக்குகளின் ஆதரவுடன், பிக்பாஸ் பட்டத்தையும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையும் வென்று வெளியில் வருவார். கடந்தாண்டு நடைபெற்ற பிக்பாஸ் 8-வது சீசனில் முத்துக்குமாரன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை சௌந்தர்யாவும், விஷால், பவித்ரா இருவரும் மூன்றாவது இடங்களை பிடித்தனர்.
அடுத்த சீசன் மலையாளத்திலும், தெலுங்கிலும் தொடங்கிய நிலையில், தமிழில் எப்போது வரும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதல் விறுவிறுப்பாக்கும் வகையில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சீசனில் போட்டியாளர்களாக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, டிவி சீரியல் நடிகைகள் ஜனனி, பரினா ஆசாத் உள்ளிட்டோர் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இவர்கள் வரிசையில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் மற்றும் வாட்டர்மெலன் ஸ்டார் எனப்படும் டாக்டர் திவாகர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.