Anjaamai movie review
Anjaamai movie review

விமர்சனம்: அஞ்சாமை - யாரை திருப்திபடுத்துகிறது?

ரேட்டிங்(3 / 5)

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் நமது தமிழ்நாட்டு மாணவர்கள் பலர் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று சாதனை செய்து வருவதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் நீட் தேர்வு தேவையா என்பது பற்றியும், நீட் தேர்வு நடத்துவதில் உள்ள

நடைமுறை சிக்கல்கள் பற்றியும் சொல்லும் ‘அஞ்சாமை’ படத்தைத் தந்துள்ளார் இயக்குநர் SP சுப்புராமன். இந்தப் படத்தை மருத்துவர் திருநாவுக்கரசு MD தயாரித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் வாழும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி சர்க்கார் - சரசு. மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் இவர்களின் மகன் அருந்தவம் மருத்துவக் கனவுடன் மேற்கொண்டு பள்ளியில் படிக்கிறார். எதிர்பாராத விதமாக மருத்துவம் படிக்க நீட் நுழைவுத் தேர்வு அவசியம் என அரசு அறிவிக்க லட்சத்தில் செலவு செய்து தனியார் பயிற்சி நிறுவனத்தில் தன் பையனைச் சேர்த்துப் படிக்க வைக்கிறார் சர்க்கார்.

துரதிருஷ்டவசமாக நீட் தேர்வு நடக்கும் மையம் ஜெய்ப்பூர் என்று அறை சீட்டில் வந்துவிடுவதால் தன் மகனை மிகுந்தப் போராட்டங்களுக்கு நடுவில் மதுரையிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்கிறார் சர்க்கார். பயணக் களைப்பாலும், சரியான உணவு கிடைக்காததாலும் ஜெய்ப்பூரில் இறந்துவிடுகிறார். தன் தந்தையின் இறப்புக்கு இந்த நீட் தேர்வும், தேர்வினால் ஏற்பட்ட குளறுபடியும்தான் காரணம் என அரசங்கத்தின் மீது வழக்குத் தொடுக்கிறார் மகன் அருந்தவம். இதற்கு ஒரு காவல் துறை அதிகாரியும் உதவி செய்கிறார். இந்த வழக்கில் விவாதிக்கப்படும் நீட் தேர்வு தொடர்பான சிக்கல்கள்தான் அஞ்சாமை.

படத்தின் மேக்கிங் மிக நன்றாகவே உள்ளது.குறிப்பாக ஜெய்ப்பூருக்கு மேற்கொள்ளும் ரயில் பயணம் நாமே பயணம் செய்வதுபோல உணர்வைத் தந்துவிடுகிறது. நீதிமன்றக் காட்சிகள் அரசியல், அதிகார வர்க்கத்தின் அலட்சியப்போக்கைக் காட்டுகிறது. சித்தார்த் கனவைச் சுமந்து படிக்கும் மகனுக்குத் தோள் கொடுக்கும் அப்பாவாக நன்றாக நடித்திருக்கிறார். பதின்ம வயதில் இருக்கும் மகனுக்கும், மகளுக்கும் அம்மாவாக வாணி போஜன் நடிப்பில் ஆகா சொல்ல வைக்கிறார். ஒரு வழக்குரைஞராக நடித்து ரஹ்மான் "நானும் ஆட்டத்தில் இருக்கிறேன்" என்று சொல்ல வைக்கிறார். அருந்தவமாக நடிப்பவரும், நீதிபதியாக நடிப்பவரும் சரியான தேர்வு. ராகவ பிரசாத் இசையில் பாடல்கள் சுமார் ரகம். நீட் தேர்வில் இருக்கும் குளறுபடிகளை எமோஷனல் பின்புலத்தில் சொன்னதில் படம் மனதிற்கு நெருக்கமாகிறது.

புதுகோட்டையிலிருந்தும், விழுப்புரத்திலிருந்தும் நீட் தேர்வில் மாணவர்கள் சாதித்துக்கொண்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழியாகவும் நீட் தேர்வில் நம் தமிழ் மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நீட் எதிர்ப்பு பேசும் ‘அஞ்சாமை’ போன்ற படங்கள் ஏன் என ரசிகர்கள் கேள்விகளை முன்வைக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
எய்ட்ஸ் வதந்தி குறித்து மனம் திறந்த நடிகர் மோகன்... பல வருடங்களுக்கு பிறகு முற்றுபுள்ளி!
 Anjaamai movie review

பின்குறிப்பு:

நீட் தேர்வு எதிர்ப்பு கதையில் பல படங்கள் தமிழில் வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்னால் நீட் பற்றிப் பார்ப்போம்:

இன்றைய தினத்தில் நீட் நுழைவுத் தேர்விற்குத் தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு இல்லை. நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் மத்திய அரசின் பாடத்திட்டத்தில் இருந்து (சிபிஎஸ்சி) கேட்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்கள் சி.பி.எஸ்.சிக்கு இணையாக பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்க ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக, தென் மாநிலங்கள். நமது மாநில அரசின் பாடத்திட்டம் சி.பி.எஸ்.சி.க்கு இணையாக இல்லை. எனவே, நமது மாநில வழி கல்வியில் படித்தவர்கள் இந்த நீட் தேர்வை எதிர்கொள்ளச் சிரமப்படுகிறார்கள்.

ஏழை எளிய மாணவர்கள் மத்திய அரசின் கல்வியை இலவசமாக பெற நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசால் இந்தியா முழுவதும் நவோதயா பள்ளிகள் அறிமுகம் செய்யப்பட்டது. இது உண்டு, உறைவிட பள்ளியாகும். 'ஹிந்தி எதிர்ப்பு' என்ற ஒற்றைக் காரணத்தால் இந்தப் பள்ளிகள் தமிழ்நாட்டிற்கு வருவதைத் தடுத்துவிட்டார்கள் நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்.

இந்த நவோதயா பள்ளிகள் இருந்திருந்தால் நம் தமிழ்நாட்டு ஏழை மாணவர்கள் பலர் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவர்களாகி இருப்பார்கள். அனிதாக்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கமாட்டார்கள். இந்த விஷயங்கள் எதுவுமே நம் தமிழ் இயக்குநர்கள் நீட் எதிர்ப்பு படத்தில் சொல்வதில்லை. அஞ்சாமை பட இயக்குநரும் இதைச் சொல்லவில்லை. மத்திய அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்க ஆர்வம் காட்டும் நம் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் மத்திய அரசின் சிறந்த கல்வித்திட்டங்களை இங்கே கொண்டு வருவதில் தடையாக இருப்பது ஏனோ?

logo
Kalki Online
kalkionline.com