
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகம் முழுவதும் புகழ்பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்து வருவபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ் திரையுலகில் 1992-ம் ஆண்டும் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே இவரின் பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார்.
தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவரை ரசிகர்களால் செல்லமாக ‘இசைப்புயல்’ என அழைக்கப்படுகிறார். தற்போது இவர் இந்தியாவை தாண்டி உலகமே போற்றும் அளவிற்கு பல சாதனைகளை புரிந்துள்ளார். அதுமட்டுமின்றி ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு உலகளவில் அதிகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இந்நிலையில் கடந்த 2023-ம் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் மட்டும் இல்லாமல் இரண்டாம் பாகமும் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இரண்டு படங்களுக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இதில் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தில் ‘வீரா ராஜ வீரா...' பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடல் தொடர்பாக பாடகர் பயாஸ் வாசிபுதீன் தாகர் என்பவர், டெல்லி ஐகோர்ட்டில் ஏ.ஆர்.ரகுமான் மீது காப்புரிமை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு நீதிமன்றம் போட்டிருக்கும் அதிரடி உத்தரவு தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பத்மஸ்ரீ விருது பெற்ற பயாஸ் வாசிபுதீன் தாகர், ‘வீரா ராஜா வீரா...' பாடல், தனது தாத்தா நசீர் பயாசுதீன் தாகர் மற்றும் தந்தை ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் 1970-ல் இசையமைக்கப்பட்ட ‘சிவ ஸ்துதி' என்ற பாடலில் இருந்து நகலெடுக்கப் பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இந்த பாடல் சில நிகழ்ச்சிகளில் பாடப்பட்டிருப்பதாகவும் கூறி, அது தொடர்பான ஆவணங்களையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் கோர்ட்டின் அறிவுரையை ஏற்று ஏ.ஆர்.ரகுமான் சம்பந்தப்பட்ட பாடலின் மூலப்பதிவை சமர்ப்பித்து இருந்தார். இந்த வழக்கில் வரிகள் தவிர ராகங்கள் ஒரே மாதிரி இருப்பதாக நீதிபதிகள் கூறியதைத் தொடர்ந்து, மேலும் சில முக்கிய இசை கோப்புகள் ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன் ஏ.ஆர் ரகுமான் தரப்பில், சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு தான் வீர ராஜ வீர பாடலை உருவாக்கி இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் காப்புரிமை மீறப்பட்டதாக கூறி, ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடியை, பயாஸ் வாசிபுதீன் தாகர் தரப்புக்கு வழங்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து சட்ட ரீதியான மேல் நடவடிக்கைகளை எடுக்க ஏ.ஆர்.ரகுமான் தரப்பினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மனைவியுடன் விவாகரத்து, உடல்நலம் பாதிப்பு என்று சமீப காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு தற்போது புதிதாக காப்புரிமை பிரச்சனையும் சேர்ந்துள்ளது வேதனை அளிப்பதாக உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.