

இந்திய திரை உலகின் சர்வதேச முகமாக இருப்பவர் ஏ.ஆர். ரஹ்மான். இந்திய இசையை சர்வதேச தரத்தில் உயர்த்தியதற்கும் , உலக அளவில் இந்திய இசையை கொண்டு சேர்த்ததற்கும் அவர் முக்கிய காரணம் என்றால் மிகையல்ல. இசையில் பல்வேறு சாதனைகளையும் ஏராளமான விருதுகளைப் பெற்ற அவருக்கு மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற 56-வது சர்வதேச சாதனையாளர் மாநாட்டில், அமெரிக்கன் அகாடமி ஆப் அச்சிவ்மண்ட் அவருக்கு புகழ் பெற்ற கோல்டன் பிளேட் விருதை அளித்து கௌரவித்துள்ளது. இசைத்துறையில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை செய்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.
வாஷிங்டனில் உள்ள மெல்லன் ஆடிட்டோரியத்தில் நடந்த மிகப் பிரம்மாண்டமான விழாவில் ரஹ்மானுக்கு இந்த கௌரவம் கிடைக்கப்பட்டது. ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனரும் , ‘லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்’ திரைப்படத்தின் மூலம் சர்வதேச புகழ்பெற்றவருமான பீட்டர் ஜாக்சன் ரஹ்மானுக்கு இந்த உயரிய விருதை அளித்தார்.
இந்த கோல்டன் பிளேட் விருது ஒவ்வொரு ஆண்டும் கலை, அறிவியல், பொது சேவை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதினை இதற்கு முன்னர் ஹாலிவுட் ஜாம்பவான்கள் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் , பீட்டர் ஜாக்சன், எலிசபெத் டெய்லர் , கிளின்ட் ஈஸ்ட்வுட், ஹருகி முரகாமி, ஜூலி ஆண்ட்ரூஸ், மாயா ஏஞ்சலோ, பிரான்சிஸ் ஃபோர்டு கோப்போலா மற்றும் ஆண்ட்ரே அகஸ்ஸி போன்றோர்கள் கோல்டன் பிளேட் விருதினை பெற்றுள்ளனர்.
இந்த விருதினை இந்தியாவில் யாரும் இதற்கு முன்னர் பெற்றதில்லை. ஏராளமான விருதுகளை வென்ற ரஹ்மானின் சாதனைகளில் இதுவும் ஒரு மைல்கல்லாக உள்ளது .சிறப்புமிக்க உயரிய விருதை பெற்ற ரஹ்மான், “ இந்த அங்கீகாரம் எனக்கு மிகுந்த பணிவையும், பெருமையையும் அளிக்கிறது.
எனது இந்த வெற்றிக்கு காரணமான என் இந்திய நாடு , என்னை செதுக்கிய இயக்குனர்கள், இசை கலைஞர்கள் , எனக்கு பல ஆண்டு காலமாக உத்தியோகம் அளித்து வரும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு இந்த விருதினை நான் சமர்ப்பிக்கிறேன்.
எனது கலை உலக பயணத்தில் இந்த ஒரு மகத்தான சாதனை ஒரு மைல் கல்லாக மட்டுமல்லாமல், இந்திய இசையை உலக அரங்கில் உயரத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பினை எனக்கு கொடுத்துள்ளதாக கருதுகிறேன்.கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய திரை உலகில் அசைக்க முடியாத இடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார்.
தனது முதல் திரைப்படமான ரோஜாவிற்காக தனது முதல் தேசிய விருதை வென்றார். அதன் பிறகு 5 முறை தேசிய விருதுகளை வென்று நாட்டிலேயே அதிக தேசிய விருதுகளை வென்ற இசையமைப்பாளர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.
33 முறை பிலிம்பேர் விருதுகளைப் பெற்றும் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார். சர்வதேச அளவில் உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதை இரண்டு முறையும் , கோல்டன் குளோப் , கிராமி விருதுகள் , பாஃப்டா விருதுகளையும் வென்ற ஒரே இசையமைப்பாளராக இருக்கிறார். ரஹ்மானின் திறமைக்கு அவர் அடைய வேண்டிய அனைத்து உயரங்களையும் கடந்து விட்டார்.