

இந்தியாவில் போலி மருந்துகளின் விற்பனை அதிகரித்து வரும் சூழலில், அதனைத் தடுக்க மத்திய அரசு கியூஆர் கோடு நடைமுறையை தற்போது கட்டாயமாக்கி உள்ளது. இதன்படி வருகின்ற 2027 ஜூலை 1-ம் தேதி முதல் புற்றுநோய் மருந்துகள், அனைத்து வகையான தடுப்பூசிகள், போதை மற்றும் மனநல மருந்துகள் உள்ளிட்டவற்றில் க்யூ ஆர் கோடு கட்டாயம் அச்சிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 22 ஆம் தேதி ஆன்லைன் மருந்து விற்பனையை எதிர்த்து, நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
ஆன்லைனில் மருத்துவரின் ஒப்புகைச் சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதோடு, போலி மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக மருந்தகங்கள் குற்றம் சாட்டின
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகெங்கிலும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து நிலைமை சீரான பிறகும் கூட இந்த ஒப்புதலை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை. மேலும் ஆன்லைன் மருந்து விற்பனையில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் மருந்து விற்பனையாளர் சங்கம் குற்றம் சாட்டியது.
இந்நிலையில் தற்போது போலி மருந்துகளின் புழக்கத்தை தடுக்க மருந்துகளின் முதன்மை பேக்கிங்கில் க்யூ ஆர் கோடை அச்சிட வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. க்யூ ஆர் கோடியில் உள் ஸ்கேன் செய்தால் மருந்துகளின் விவரங்களை வாடிக்கையாளரால் சரி பார்த்துக் கொள்ள முடியும்.
எந்தெந்த மருந்துகளுக்கு QR கோடு வரும்?
* முதல் கட்டமாக புற்றுநோய் மருந்துகள், அனைத்து வகையான தடுப்பூசிகள், போதை மற்றும் மனநல மருந்துகளில் க்யூஆர் கோடு ஹெச்டி முறை அடுத்த வருடம் ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வருகிறது.
* இரண்டாவது கட்டமாக நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளில் க்யூஆர் கோடு அச்சிடும் முறை 2028 ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
க்யூஆர் போடு அடிச்சிடுவதன் மூலம் மருந்துகளின் தயாரிப்பு முதல் விற்பனை வரை தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதன்மூலம் போலி மருந்துகளின் விற்பனையை எளிதில் தடுக்க முடியும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
க்யூஆர் கோடு மூலம் மருந்து விவரங்களை அறிவது எப்படி?
நுகர்வோர்கள் தங்கள் மொபைலில் மருந்து டாக்கிங்கில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் மருந்தின் பெயர், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், மருந்து தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி மற்றும் பேட்ச் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திரையில் தெரியும்.
போலி மருந்து அச்சுறுத்தலில் இருந்து காக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு:
இந்தியாவில் ஏற்கனவே 300 முன்னணி நிறுவனங்களின் மருந்துகளில் க்யூஆர் கோடு அச்சிடும் நடைமுறை செயல்பாட்டில் இருக்கிறது. இந்த நடைமுறையை விரிவுபடுத்தும் நடவடிக்கையாகவே தற்போது மத்திய அரசின் இந்த உத்தரவு பார்க்கப்படுகிறது.
மருந்துகளில் க்யூஆர் கோடை அச்சிடுவதன் மூலம் மருந்துகளின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். அதோடு பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் போலி மருந்துகளை அடியோடு வேரறுக்க முடியும் என மத்திய அரசு முழுமையாக நம்புகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியோடு மத்திய அரசு போலி மருந்துகளை ஒழிக்கும் நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம்.