

வரும் நவம்பர் 5 ஆம் தேதி ராமாயணம் திரைப்படம் உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் அந்த படத்தின் கதாநாயகன் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும், படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் . ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பலரும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ரசிகரின் கனவு நனவானதை நெகிழ்ச்சியுடன் மேடையில் தெரிவித்தார்.
கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக இந்திய இசை உலகில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் ஏ.ஆர். ரஹ்மான். எப்போதும் தனது ரசிகர்கள் மீது மதிப்பும் அன்பும் வைத்திருப்பவர். தற்போது உலகின் அதிக பட்ஜெட் திரைப்படமான இராமாயணத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஏ ஆர். ரஹ்மான் மட்டுமல்லாமல் , அவருடன் இணைந்து ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஹான்ஸ் சிம்மரும் பணிபுரிந்துள்ளார். இதற்கு முன்னர் ஏஆர். ரஹ்மான் எந்த ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து திரைப்படங்களுக்கு இசையமைத்தது கிடையாது.
ரஹ்மானை போலவே ஹான்ஸ் சிம்மரும் சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதினை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவருக்கும் ரஹ்மானுக்கும் நெருங்கிய நட்பு நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. நியூயார்க் நகரில் உள்ள சிம்மரின் பிரம்மாண்ட மியூசிக் ஸ்டுடியோவில் தான் , ரஹ்மானின் ஸ்டுடியோவும் இருக்கிறது. ஒரு ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் ஏஆர். ரஹ்மானின் இசையை, தனது குழுவினருடன் சிம்மர் வாசித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராமாயணம் திரைப்படத்தின் மகத்துவத்தை கருதி, அதை இசையின் தரம் சர்வதேச அளவில் இருக்க வேண்டும் என்று , சிம்மருடன் பணிபுரிய ரஹ்மான் சம்மதித்திருந்தார்.
ராமாயணம் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய ரஹ்மான் , "ராமாயணம் திரைப்படத்தில் பணியாற்றியது கற்றலுக்கான ஒரு பயணமாகும். ராமாயணம் ஒருவர் பெற்றோரிடம், மனைவியுடன், குழந்தைகளிடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கற்பிக்கிறது. இது அறநெறிகளை கற்பிக்கும் ஒரு கதாபாத்திரத்தை பற்றியது , இதில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது . நிதேஷ், யாஷ், ரன்பீர், சாய் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி". நான் உங்களிடம் ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன்.
2014- ஆம் ஆண்டு எனக்கு ஒரு இமெயில் வந்தது. அதில் , "வெள்ளிக்கிழமை அதிகாலையில் நீங்கள் என் கனவில் வந்தீர்கள் ,உலகில் பலரையும் நீங்கள் ஊக்கப்படுத்துவது போல என்னையும் நீங்கள் ஊக்கப்படுத்தினீர்கள். அதனால் இதை உங்களிடம் தெரிவிக்க நான் நினைத்தேன். ஏனெனில் எனது இந்த கனவு நிச்சயம் நிஜமாகும் என்று நம்புகிறேன். என் கனவில் நீங்கள் இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் ஒரு இசை நிகழ்ச்சியின் மூலம் மாயாஜாலங்கள் ஏற்படுத்துவதை பார்த்தேன். சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து மிகச்சிறந்த காவியமான இராமாயணத்தை நீங்கள் செதுக்கி உள்ளீர்கள். இந்த நிகழ்ச்சி மாயமாகவும் , மயக்கும் வண்ணமாகவும் இந்த உலகிற்கு அவசியமான அன்பு , கடமை , வாழ்க்கை ஆகிய அடிப்படை கொள்கையை பரப்புவதாக இருக்கிறது." என்று இருந்தது.
2014 ஆம் ஆண்டு அந்த இமெயிலை அனுப்பிய , நியூயார்க்கில் உள்ள சதீஷ், மீண்டும் எனக்கு மெயில் அனுப்பி , எனது முந்தைய மெயில் ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டார் .2026 ஆம் ஆண்டு நடைபெறும் நிகழ்வை 2014 ஆம் ஆண்டு ஒருவர் எனக்கு தெரிவித்திருந்தார். அது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது , அவரது கனவு நடந்து விட்டது
மேலும் தொடர்ந்த ரஹ்மான் இந்திய இசையில் பக்தி நிரம்பி உள்ளது இசையின் அடிப்படையே பக்தி தான். ராமாயணம் போன்ற திரைப்படங்களுக்கு எப்படி ராகங்களை பயன்படுத்த வேண்டுமென்று ஒரு இசையமைப்பாளருக்கு கற்றுத்தர தேவையில்லை. நாங்கள் 3 வருடங்களை மெட்டுக்களை கொடுத்தோம் , இப்போது முழு ஆல்பம் தயாராகி விட்டது , என்று கூறினார்.