ஏ.ஆர்.ரஹ்மான் இந்த கோடையில் வட அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக அறிவித்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது குரலால் இந்திய மக்களின் மனதைக் கவர்ந்தவர். சில காலங்களிலேயே கோலிவுட்டிலிருந்து, பாலிவுட் என இந்தியா முழுவதும் இசையமைக்கத் தொடங்கினார். 1992ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது பாடல்களுக்காக இரண்டு முறை ஆஸ்கார் விருது வென்றுள்ளார். மேலும் 7 தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார்.
பொதுவாக புதிதாக வரும் தொழில்நுட்பங்களையும் இந்தியாவில் பயன்படுத்தப்படாத தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திப் பார்ப்பதில் விருப்பம் கொள்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்தவகையில் கடந்த 2022ம் ஆண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் லீ மஸ்க் என்ற 5டி திரைப்படத்தை செயற்கைத் தொழில்நுட்பம் மற்றும் VR தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இயக்கியிருந்தார். இதற்காக அவர் விருதும் வாங்கியுள்ளார். இப்படி பல சாதனைகளை படைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்ததாக ஒரு முயற்சி எடுக்கப்போகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான், படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல இடங்களில் கச்சேரி நடத்தி வருவதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
அந்தவகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தான் அடுத்ததாக நடத்த உள்ள இசை நிகழ்ச்சி குறித்து அறிவித்துள்ளார். அதாவது, வட அமெரிக்காவில் ‘தி ஒன்டேர்மென்ட்’ (THE WONDERMENT) என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி வரும் கோடையில் நடத்தவுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்தான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இளையராஜா லண்டனில் சிம்பொனி நடத்தியது உலகளவில் பேசும்பொருளாக மாறியது. இதனைத்தொடர்ந்து ரஹ்மானும் தனது இசையை உலகம் முழுவதும் பரப்ப இந்த ஏற்பாடை செய்திருக்கிறார்..
சமீபத்தில், இவருக்கு நீர்சத்து குறைபாடு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் அறிவித்துள்ள இந்த இசை நிகழ்ச்சி குறித்தான செய்தி உலகெங்கிலும் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலுமிருந்து எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.