meta property="og:ttl" content="2419200" />

இளையோரையும் எளியோரையும் ஏற்றம் பெறவைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

A.R.Rahman Music College
A.R.Rahman Music College
Published on

இசையுலகில் ஒரு புதிய தலைமுறையை உருவாக்க ஏ.ஆர். ரகுமான் உருவாக்கிய கே.எம்.காலேஜ் ஆப் மியூசிக் அண்ட் டெக்னாலஜி என்ற இசைக்கல்லூரியைப் பற்றிய அலசல் தான் இந்தப் பதிவு.

தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளர் சாதிப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதுவும் இசைஞானி இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலத்தில் புதிதாக ஒருவர் இசையில் சாதித்தால் அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அந்த பெருமைக்குரியவர் தான் ஆஸ்கர் புகழ் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். ஆரம்ப காலத்தில் வாய்ப்புக்காக தவித்த இவர் சென்னை வானொலிக்கும், பொதிகை தொலைக்காட்சிக்கும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இப்படியான ஒரு சூழலில் தான் இயக்குநர் மணிரத்னத்தின் ரோஜா படத்தில் இசையமைக்க ஏ.ஆர். ரகுமானுக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் படத்திலேயே தனது இசையால் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

பட வாய்ப்பு கிடைப்பதற்கு முன், தொடக்கத்தில் எண்ணற்ற இன்னல்களை சந்தித்த ஏ.ஆர்.ரகுமான், தான் அடைந்த துன்பங்களை இசைத்துறையில் சாதிக்க விரும்பும் ஏழை எளிய இளையோர்கள் அடையக்கூடாது என விரும்பினார். இந்த உயரிய நோக்கத்தில் உருவானது தான் கே.எம்.காலேஜ் ஆப் மியூசிக் அண்ட் டெக்னாலஜி என்ற இசைக்கல்வி நிறுவனம். கடந்த 16 ஆண்டுகளாக இசை ஆர்வமுள்ள அரசுப் பள்ளி மாணவர்களைக் கண்டெடுத்து கட்டணமில்லாமல் இசையைக் கற்பித்து வருகிறார் ரகுமான். எதிர்காலத்தில் இசைத்துறையில் ஒரு தலைமுறையை உருவாக்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இசைக்கல்வி பயில இடம் தருகிறார்.

மாணவர்களுக்கு உலகத் தரத்திலான இசைக் கல்வியைத் தானே நேரடியாகவும், மிகச்சிறந்த சர்வதேச மற்றும் இந்திய இசை ஆசிரியர்களைக் கொண்டும் பயிற்றுவித்து வருகிறார். இதற்காக இவர் உருவாக்கியது தான் உலகத்தின் முதல் சிம்பொனி இசைக்குழுவான ‘சன்சைன் ஆர்கெஸ்டிரா’ (Sunshine Orchestra). ஏ.ஆர்.ரகுமானும் சிம்பொனி இசையைத் தந்தே ‘மேஸ்ட்ரோ’ எனும் பட்டத்தைப் பெற்றுள்ளார். இருப்பினும் தனது பெயருக்கு முன்னால் ‘மேஸ்ட்ரோ’ எனப் போட்டுக் கொள்ள மாட்டார். இவரின் இசைக் கல்லூரியில் வெஸ்டர்ன், ஹிந்துஸ்தானி, ஜாஸ், பாப் மற்றும் நாட்டுப்புற இசை என அனைத்து வகையான இசையும் கற்பிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
(இசை) கலை உலகின் தலைநகரமாம் சென்னை!
A.R.Rahman Music College

இசையின் வரலாறு முதல் நவீன தொழில்நுட்ப ரெக்கார்டிங் வரை பயிற்றுவிக்கிறார். வயலின், கிடார், பியானோ, ப்ளுட் மற்றும் பல மேற்கத்திய இசைக் கருவிகளிலும் பயிற்சி அளிக்கிறார். ஒரு வருட சான்றிதழ், இரண்டு வருட டிப்ளமோ மற்றும் நான்கு வருட படிப்பு போன்ற பிரிவுகளை இங்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதனால் மாணவர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ற பிரிவை தேர்வு செய்து இசையைக் கற்க முடிகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டு மாணவர்களும் இங்கு வந்து உரிய கட்டணத்தைச் செலுத்தி இசைக்கல்வியைப் பயில்கின்றனர்.

ரகுமானின் இசைக் கல்லூரி லண்டனில் இருக்கும் மிடில்செக்ஸ் யூனிவர்சிட்டியுடன் இணைந்து செயல்படுகிறது. அவ்வகையில் அமெரிக்கா, லண்டன் மற்றும் ஐரோப்பாவில் இருந்தும் ஆசிரியர்கள் இசையைக் கற்பிக்கிறார்கள். இங்கு இசைக்கல்வி பயின்ற பல மாணவர்கள் சர்வதேச இசைக் குழுக்களில் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தனது அதிகப்படியான வேலைபளுவால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ரகுமான் தனது இசைக்கல்லூரி மாணவர்களுக்கு சிபாரிசு செய்கிறார். அவ்வகையில் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளைக் கூட தனது மாணவர்களுக்கு அளித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

நாகாலாந்தில் பழங்குடி மக்களின் இசைக் கலாச்சாரம் குறித்த ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார் ரகுமான். இந்த ஆவணப் படத்தின் வேலைகளோடு அங்கிருக்கும் பழங்குடி குழந்தைகள் ஆசிரமம் ஒன்றைத் தத்தெடுத்து, ஆதரவற்ற குழந்தைகளுக்கும் இசைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளார், எளியோரை ஏற்றம் பெற வைக்கும் மாணிக்கமான ஏ.ஆர்.ரகுமான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com