வணங்கான் படத்தின் ப்ரோமோஷனில் பேசிய பாலா, ரசிகர்களிடம் ஒரு அகம்பாவம் இருக்கிறது. ஆனால், அது நல்லதுக்குதான் என்று பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநர் பாலா. புதிதுபுதிதாக வித்தியாசமான கதைகளை மக்களுக்கு கொடுப்பதில் கவனமாக இருப்பார். இவரின் படங்கள் அனைத்திலும் ஒரு தனித்துவத்தை காண முடியும். அந்தவகையில் இவர் தற்போது வணங்கான் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அருண் விஜய் நடித்திருக்கிறார்.
வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. சமீபத்தில் வணங்கான் படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் சினிமாவில் 25 ஆண்டுங்கள் நிறைவுசெய்ததை அடுத்து பாலாவை மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.
மேலும் இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட முறையில் பாலா பல பேட்டிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.
இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. முதலில் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தது பின்னர் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு ப்ரோமோஷனில் பேசிய பாலா, “பாலு மகேந்திரா சாரிடம் நான் தெரிந்துகொண்டது என்னவென்றால், ஒருவனுக்கு பசி என்றால் வாழைப்பழம் கொடு. உரிச்சி திங்க முடியாதவன் என்றால் உரிச்சிக் கொடு. அதை விட்டுவிட்டு ஏன் வாழைப்பழத்தை ஊட்டி விடுற, அது அவனுடைய வேலை என்பார். இயக்குநர்கள் 10 அல்லது 15 படம் இயக்குகிறார்கள். ஆனால், ரசிகர்கள் அந்த நேரத்தில் 100 150 படங்கள் பார்க்கிறார்கள். ஆகையால், இயக்குநரைவிட ரசிகர்களுக்கு அறிவு அதிகம்.
அவர்களை அவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது. நீ திரையில் சொல்லு. நான் புரிந்துகொள்கிறேன் என்பது தான் அவர்களுடைய பாணி. அதேபோல் குச்சி எடுத்துக் கொண்டு படத்தில் வகுப்பு எடுக்கவும் முடியாது. அவர்களைப் பொறுத்தவரை படம் எடுப்பது உன் வேலை, அதை நாங்கள் புரிந்துக்கொள்வோம் என்பதுதான் அவர்களின் எண்ணம். அந்த அகம்பாவம் அனைத்து ரசிகர்களுக்குமே உள்ளது. அது நல்லதும்கூட.” என்று பேசியிருக்கிறார்.