விமர்சனம்: மழையில் நனைகிறேன் - கிளைமேக்ஸ்ல வச்ச ட்விஸ்ட் புஸ் ஆனதுதான் மிச்சம்; தலைப்பில் மட்டுமே கவித்துவம்!
ரேட்டிங்(2 / 5)
எங்கே பார்த்தாலும் அடிதடி ஆக்ஷன் படங்களாக வந்துகொண்டிருக்கிறதே... குளிருக்கு இதமாக தேநீர் அருந்தவது போல காதல் கதை கொண்ட ஒரு படத்திற்கு போகலாம் என்றெண்ணி, மழையில் நனைக்கிறேன் படத்தின் போஸ்டரை பார்த்து, நல்ல காதல் படத்தில் நாமும் கொஞ்சம் நனையலாமே என்று நினைத்து படம் பார்க்க தியேட்டர்குள் நுழைந்தேன்.
பணக்கார வீட்டு பையன் ஜீவா ஜெபாஸ்டின் எந்த வேலைக்கும் போகாமல், வேலைக்கு போகும் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறார். நண்பனின் அப்பார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் ஐஸ்வர்யாவை பார்த்ததும் காதல் கொள்கிறார். ஆனால் ஐஸ்வர்யாவிற்கு ஜெபாவை பிடிக்கவில்லை.
ஐஸ்வர்யாவின் தங்கையை ரவுடிகளடமிருந்து காப்பாற்றி, இன்னும் பல இம்பிரஸ் வேலைகளை செய்து ஓரளவுக்கு ஐஸ்வர்யாவின் மனதில் இடம் பிடிக்கிறார். இருவரும் பைக்கில் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. விபத்தில் இருந்து மீண்டு வந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால் இருவரின் வீட்டிலும் எதிர்க்கிறார்கள். வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஜெபாஸ்டின் பொறுப்புடன் வேலைக்கு செல்கிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.
"படத்தோட கதையை சொல்லாமல் இப்படி கல்யாணம், குழந்தைன்னு சொல்றயே... கதையை சொல்லு"ன்னு நீங்க கடுப்பாகி திட்டறது கேட்கிறது. கதைன்னு ஒண்ணு இருந்தாதானே சொல்றதுக்கு?
கிளைமேக்ஸ்ல ட்விஸ்ட் என நம்பி ஒரு விஷயத்தை வெச்சிருக்காரு டைரக்டர். ஆனால் ட்விஸ்ட் புஸ் ஆனதுதான் மிச்சம். மதம் தாண்டிய காதல் என்ற ரொம்ப பழைய வண்டியை ஓட்ட முயற்சி பண்ணி ஓட்ட தெரியாமல் ஓட்டி திரைக்கதையை பஞ்சாராக்கி வைச்சுருக்காரு டைரக்டர் சுரேஷ் குமார்.
காதல் படத்திற்கு பாடல் வரிகளும், இசையும் உயிர் நாடி. இந்த இரண்டும் இங்கே மிஸ்ஸிங். இந்த படத்தில் பாசிட்டிவான ஒரே விஷயம் ஹீரோ அமசன் பால் ஹீரோயின் ரெபெகா இருவரின் திரை கெமிஸ்ட்ரிதான்.
1980 களில் வர வேண்டிய கதையம்சம் கொண்ட படத்தை இந்த 2024ல் தந்திருக்கிறார் டைரக்டர். மழையில் நனைகிறேன் - தலைப்பில் காட்டிய அக்கறையை சிறிது கதையிலும் காட்டி இருக்கலாம் சார்!