

எண்பத்தாறு வயதில்
இறைவனடி சேர்ந்தவரே!
எளிமையின் இருப்பிடமாய்
என்றைக்கும் இருந்தவரே!
விவேகானந்தர் போலவே
கைகட்டியே என்றும்
கடமையாற்றி மகிழ்ந்தவரே!
முகத்திலோ புன்முறுவல்
முழுமையான உடலிலும்
சமாதானத்தை ஓடவிடும்
சன்மார்க்க பாடி லாங்க்வேஜ்!
ஐந்தாறு படங்களுக்கு
ஒரே நேரத்தில்
பூஜைபோட்டு ஆரம்பிக்கும்
புகழ், நேரம் இருந்தபோதும்
எள்ளளவும் அலட்டாது
இருந்த தமிழ்மகனே!
உங்களிடம் அதனைத்தான்
உலகம் கற்கவேண்டும்!
ஏவிஎம் படமென்றால்
வேறு எதனையும் யோசிக்காது
படம் பார்க்க அனைவரையும்
பண்புடனே ஈர்த்தவரே!
டிசம்பர் மூன்றில் பிறந்து
நான்கில் உயிர்நீத்த
நாயகன் நீவிரன்றோ!
பழனிச்சாமி ஓவியரை
சிவகுமார் ஆக்கி
சிறந்திடச் செய்தவரே!
உங்கள் படங்களென்றால்
ஓடிவந்து நடித்திடவே
நடிகர்கள் இருந்ததெல்லாம்
நற்கால நிகழ்வன்றோ!
உங்கள் கம்பனியின்
உலக உருண்டை லோகோ போலவே
பூமிப்பந்தில் உங்கள் புகழ்
புனிதமுடன் சுற்றி வரும்!
திரைப்படங்கள் தரணியிலே
திகட்டாமல் ஓடும்வரை
உங்கள் பெயர் நிலைத்திருக்கும்
ஒருபோதும் மறையாமல்!
மலையாளம் தெலுங்கு கன்னடமென்று
பல்வகை மொழிகளிலும்
பாங்குடனே முந்நூறுக்கும் மேலாய்
முத்தான படங்கள் தந்தவரே!
தமிழகத்தில் கலைமாமணி
பாண்டிச்சேரியில் பண்பின் சிகரம்
போன்ற விருதுகளுக்குப்
புகழ்சேர்த்த நல்லவரே!
நானும் ஒரு பெண், சம்சாரம் அது மின்சாரம்
போன்ற படங்களுக்குப்
புகழ் விருது பெற்றவரே!
உலகத் திரைத்துறையில்
உயரிய இருதுருவங்களாய்
என்றைக்கும் புகழ்பரப்பும்
எங்கள் கணேசனையும் உலகநாயகனையும்
ஊக்குவித்து வளர்த்துவிட்ட
உங்களுக்கா மரணமய்யா?
தூல உடம்பைத்தான் துர்மரணம்
தூக்கிச் செல்லும்!
புகழுடம்பு என்றைக்கும்
புனிதமுடன் வாழ்ந்திருக்கும்!