
தாய்மையின் அருமையையும் பெருமையையும் எடுத்துக்காட்டும் விதமாக, பிரபல பேட்மிண்டன் வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா, செய்த மனிதாபிமான செயல் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் 2009-ம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தன்னை தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக்கொண்டார்.
தொடர்ந்து, நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஷ்ணு விஷால், இந்தாண்டு ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.
இவர் தனது முதல் மனைவி ரஜினி நட்ராஜை விவகாரத்து செய்த பின்னர், கடந்த 2021ம் ஆண்டு பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான் தான் மிரா என பெயர் வைத்தார்.
குழந்தை பிறந்த பிறகு, தனது குழந்தைக்கு போக, தனது தாய்ப்பாலை அது கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்க ஜுவாலா கட்டா முடிவு செய்தார். அதனை தொடர்ந்து, ஜுவாலா தினமும் 600 மில்லி லிட்டர் தாய்ப்பாலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்து வருகிறார். அந்தவகையில் தாய்ப்பால் வங்கிகளுக்கு கடந்த 4 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 30 லிட்டர் வரை அவர் தனது தாய்ப்பாலை தானமான வழங்கியுள்ளார். தாய் இன்றி ஆதரவில்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு ஒரு தாயாக உதவும் வகையில் ஜுவாலா கட்டா இதை முன்னெடுத்துள்ளார். இதுபோல பல தாய்மார்கள் தாய்ப்பால் தானம் கொடுத்து வந்தாலும், பிரபலமான ஒருவர் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘உயிரை காப்பாற்றும் தாய்ப்பாலின் மகிமை அளப்பரியது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் வரம்' என்றார்.
இவரின் இந்த தாய்ப்பால் தானம் வழங்கும் முயற்சி , மற்ற தாய்மார்களும் குழந்தைக்கு அளிக்க முடியாமல் மீதமுள்ள பாலை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
தற்போது இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஜுவாலா மற்றும் விஷ்ணு விஷால் தம்பதியருக்கு பெருமளவு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஜுவாலா கட்டாவின் தாய்ப்பால் தானம் மூலம் உயிர்களை காக்கும் இந்த முயற்சி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது.