Bairi part 1 movie review in tamil
Bairi part 1 movie review in tamil

'பைரி' பாகம் 1 - திரைப்பட விமர்சனம்!

Published on
புறா பந்தயத்தை பின்னணியாகக் கொண்ட மாறுபட்ட கதைக்களம்(3 / 5)

ஒவ்வொரு வருடமும் அறிமுக இயக்குனர்கள் வாழ்வியலை சொல்லும் சில படங்களை தந்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்து விடுகிறார்கள். சென்ற வருடம் அயோத்தி, பம்பர் போன்ற படங்களை சொல்லலாம். இந்த 2024 ஆம் வருடம் இப்போது வெளியிடவிருக்கும் பைரி என்ற படத்தை இந்த வரிசையில் சேர்க்கலாம்.

பைரி என்றால் கழுகு என்று பொருள். இப்படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி நாகர்கோவிலில் நடைபெறும் புறா பந்தயத்தை மையப்படுத்தி கதை களத்தை உருவாக்கி உள்ளார்.

நாகர்கோவிலில் வசிக்கும் இளைஞன் லிங்கம் படித்து விட்டு வேலைக்கு போகாமல் புறா பந்தயம் நடத்துகிறான். ஊரில் உள்ள பெரிய ரவுடி சுயம்புவும் புறா பந்தயம் நடத்துகிறார். பந்தயத்தில் சுயம்பு செய்யும் ஊழலை லிங்கம் கண்டுபிடித்து பிரச்சனை செய்ய இருவருக்கும் இடையில் மோதல் வெடிக்கிறது. இந்த மோதலில் லிங்கத்தின் நண்பர் தாக்கப்பட்டு குத்துயிரும் கொலையுயிருமாக உயிருக்கு போராடுகிறார். லிங்கம் பந்தயமே வேண்டாம் என்று வேலை தேடி சென்னை செல்கிறார். இத்துடன் முதல் பாகம் முடிவடைகிறது.

படத்தில் பாராட்டபட வேண்டிய முதல் விஷயமாக இருப்பது புறா பந்தயம்தான். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் சிறிய பட்ஜெட்டில் பந்தய காட்சிகளை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஹீரோவின் புறா ஜெயிக்கவேண்டுமே என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு கொண்டு வந்து விடுவதே இயக்குநருக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம்.

புறாக்களில் இருக்கும் வகைகள் பற்றியும், இவை பறக்கும் தூரங்கள் பற்றியும், பாடமாக இல்லாமல் சுவாரசியமாக புரிய வைத்துள்ளார் டைரக்டர். நாகர்கோவில் பகுதியில் நான்கு தலைமுறைகளாக நடக்கும் புறா பந்தயத்தின் பின் உள்ள வரலாறு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இந்த காட்சிகளுக்காக VFX சேகர் முருகன் நிறைய உழைத்திருக்கிறார்.

அய்யா வைகுண்டர், பெருந்தலைவர் காமராஜர் போன்ற அடையாளங்கள் படம் முழுக்க உள்ளன. ரமேஷ் பண்ணையார் என்ற கேரக்டரை பார்க்கும் போது தென் மாவட்டத்தில் மறைந்த ஒரு பண்ணையார் நினைவுக்கு வருகிறார்.

இதையும் படியுங்கள்:
நடிகராக அறிமுகமாகும் தங்கர்பச்சான் மகன்; கவனம் பெறும் போஸ்டர்!
Bairi part 1 movie review in tamil

" என்ன மக்களே இது, நம்மால முடியாது பார்த்துக்கோங்க" இப்படி வரும் வசனங்கள் எல்லாம் நம்மை நாஞ்சில் நாட்டில் இருப்பது போன்ற உணர்வை தந்து விடுகிறது. படத்தில் நடித்த பெரும்பாலானவர்கள் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பது கூடுதல் சிறப்பு.

அருண்ராஜ் இசையில் பாடல்கள் கேட்கும் படி உள்ளது. அம்மாவாக நடிக்கும் விஜி சேகர் மகனின் மீதுள்ள பாசத்தை, ஒரு யதார்த்த தாயாக சரியாக வெளிப்படுத்தி உள்ளார். ஹீரோ சையத் மஜீத் நன்றாக நடித்திருந்தாலும், சில காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். நண்பனாக நடிக்கும் இப்படத்தின் டைரக்டர் ஜான் கிளாடி நடிகராகவும் ஜெயித்துவிட்டார் என்று சொல்லலாம். மாறுபட்ட கதைகளம், நல்லதொரு முயற்சி - பைரி - 1 ஒரு புது அனுபவம். இப்படம் நாளை மறுநாள் (பிப்ரவரி 23ம் தேதி) திரைக்கு வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com