

நாராயணன் இயக்கத்தில் அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா நடிப்பில் வெளிவந்துள்ள படம் பேட்டில் (Battle).
ஹீரோ அர்ஜுன் பிரபாகரன் ஒரு ராப் பாடகர். சரியான வாய்பிற்க்காக போராடி கொண்டிருக்கிறார். ஒரு அமைப்பு இவருக்கு வாய்ப்பு தருகிறது. இந்த அமைப்பிடம் தனது திறமையை காட்டி வளர்க்கிறார் அர்ஜுன் பிரபாகரன். இவருக்கு லண்டன் செல்ல வாய்ப்பு வருகிறது. இந்த சூழ்நிலையில் தனியார் பள்ளியில் வேலை செய்யும் இவரது காதலி ஆராதியா பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார், பள்ளியின் நிர்வாகி சுப்ரமணிய சிவா அங்குள்ள ஆசியர்களுக்கு அதிகமான பணிச்சுமை, மாணவர்களுக்கு சரியான ஆசிரியர்களை நியமிக்காதது போன்ற தவறான போக்குகளை கையாள்கிறார். இதை எதிர்த்து கேள்வி கேட்கிறார் ஆராதியா. இதனால் சுப்ரமணிய சிவா ஆராதியாவிக்கிற்கு அச்சுறுத்தல் தருகிறார். ஒரு கட்டத்தில் ஆராதியாவின் பிரச்சனையில் அர்ஜுன் பிரபாகரன் தலையீடு செய்கிறார். இதனால் அர்ஜுன் பிரபாகரன் லண்டன் செய்வது கேள்விக்குள்ளாகிறது. இந்த பிரச்சனை என்ன ஆனது என்று சொல்கிறது மீதிக்கதை.
இந்த படத்தின் சில பாசிட்டிவான அம்சங்களை பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இது வரை அதிகம் சொல்லாத ராப் இசையை மையப்படுத்தி படம் எடுத்ததற்க்காக இயக்குனரை பாராட்டலாம். படத்தில் வரும் அனைத்து ராப் பாடல்களும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இசை அமைப்பாளர் ஜீவா இந்த ராப் பாடல்களுக்கு சிறப்பாக இசை அமைத்துள்ளார்.
உலகமெங்கும் உள்ள ராப் இசையை நாம் ரசிக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிலுள்ள ராப் கலைஞர்கள் எப்படி நடத்த படுகிறார்கள் என்று சொல்ல முயற்சி செய்த விதம் பாராட்டும் படி இருந்தது. வில்லன் சுப்ரமணிய சிவாவிடம் போராடும் இடத்தில் சிறந்த நடிப்பை தந்துள்ளார் ஆராத்யா. சுப்ரமணிய சிவா சைக்கோ தனம் கலந்த பணக்கார வில்லனாக சபாஷ் போட வைக்கிறார். தனியார் பள்ளியின் கட்டண வசூலுக்கு பின்பு இருக்கும் அரசியலை சொல்ல முயற்சி செய்துள்ளார் டைரக்டர்.
இனி நெகடிவ் பாயிண்ட்ஸ். கதை வலுவாக இருந்தாலும் திரைக்கதையில் பல இடங்களில் தொய்வு இருக்கிறது. இரண்டு கதைகளில் ஹீரோயினை சுற்றி இருக்கும் கதைதான் ரசிக்கும் படி உள்ளது. ஹீரோ அர்ஜுன் பிரபாகரன் சிறிது நடிக்க முயற்சி செய்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். பல காட்சிகளில் இவருக்கு உணர்ச்சிகள் சரியாக வரவில்லை. ராப் நடக்கும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆர்ட் டைரக்ஷனில் படத்தின் பட்ஜெட் தெரிகிறது. கதைக்கு தரப்பட்ட முக்கியத்துவம் திரைக்கதைக்கும் ஹீரோவின் நடிப்புக்கும் தந்திருந்தால் இப்படம் சிறந்த படம் என சொல்லியிருக்கலாம்.
மொத்தத்தில் பேட்டில் - சண்டையில் ஜெயிக்கவில்லை.