நடப்பாண்டில் மலையாளத்தில் பல படங்கள் வெற்றி நடை போட்டு வரும் நிலையில், தற்போதைய காலகட்டத்தில் மலையாளத்தில் மிகச் சிறந்த நடிகர் யார் என்பதை வெளிப்படையாகக் கூறி பாராட்டியுள்ளார் நடிகை ஊர்வசி. அந்த பாராட்டுக்கு உரியவர் யார் என்பதை இப்போது தெரிந்து கொள்வோமா!
சமீப காலமாக மலையாளத் திரைப்படங்கள் பான் இந்திய அளவில் மெகா வெற்றியைப் பதிவு செய்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக கதைத் தேர்வு சொல்லப்பட்டாலும், நடிகர்களின் இயல்பான நடிப்பும் முக்கியப் பங்காற்றியுள்ளன. முன்பெல்லாம் மலையாள சினிமா என்றாலே மம்முட்டியும், மோகன்லாலும் தான் கண் முன் நிற்பார்கள். சொல்லப்போனால் இவர்கள் இருவர் தான் மலையாள சினிமாவின் தூண்கள் என்றே வர்ணிக்கலாம். இருப்பினும் சமீப காலங்களில் புதுமுக நடிகர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு போன்ற படங்களில் அதிக அனுபவம் இல்லாத நடிகர்களே நடித்திருந்தனர். இருப்பினும் இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன. இப்படங்களைத் தவிர்த்து ஆவேஷம், ஆடு ஜீவதம் போன்ற படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பின.
தமிழ்த் திரையுலகில் தனது நடிப்பின் மூலம் தனக்கென தனியிடத்தைப் பிடித்தவர் ஊர்வசி. இவர் பாக்யராஜ் இயக்கும் படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். தற்போது தமிழில் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை வெகுவாக பாராட்டி இருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மலையாள சினிமாவின் இரண்டு நாயகர்களாக மோகன்லாலும், மம்முட்டியும் இருந்தனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே பல சாதனைகளைப் படைத்து விட்டனர். இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்நிலையில் தற்போது மலையாள சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக ஃபகத் ஃபாசில் வலம் வருகிறார்.
ஏற்கனவே பான் இந்தியப் படங்களில் நடித்து வரும் ஃபகத் ஃபாசில், நாடு முழுவதும் அறியப்படும் பிரபல நடிகராக வலம் வருவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எந்தக் கதாபாத்திரம் என்றாலும் அதில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதில் இவர் சிறந்தவராக இருக்கிறார். கதைத் தேர்விலும் இவர் தனித்துவமாக நிற்கிறார். ஆவேஷம் திரைப்படத்தில் ஆக்ஷன் கதாப்பாத்திரத்தில் நடித்ததற்குப் பிறகு, இவருடைய கேரக்டர் முழு வடிவம் பெற்று விட்டது” என ஊர்வசி பாராட்டியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் ஃபகத் ஃபாசில், புஷ்பா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் பரிட்சயமானார். வேலைக்காரன், விக்ரம் மற்றும் மாமன்னன் போன்ற படங்களின் மூலம் தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்கு நெருக்கமானார். இவரது நடிப்புத் திறனை ரசிகர்கள் மட்டுமின்றி, சக நடிகர்களும் பாராட்டி வருகின்றனர். இன்று பான் இந்திய நடிகராக இருக்கும் ஃபகத் ஃபாசிலுக்கு, தொடக்க கால சினிமா தோல்வியுடன் தான் தொடங்கியது. சில தோல்விப் படங்களின் மூலம் மன அழுத்தத்திற்கு ஆளானவர், அதிலிருந்து மீண்டு நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டு தான் இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்