தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில், தற்போது 'தி கோட்' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் இந்த நிதியாண்டில் எவ்வளவு வருமான வரி கட்டியிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. வரி செலுத்தியதில் இந்திய அளவில் விஜய் எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்பதையும், எவ்வளவு வரி செலுத்தியுள்ளார் என்பதையும் இப்போது காண்போம்.
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என அழைக்கப்படும் நடிகர் விஜய், தி கோட் படத்திற்கு அடுத்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பார் என்று ஏற்கனவே தெரிவித்து விட்டார். அரசியலில் களம் கண்டிருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கியுள்ளார். இந்நிலையில், இந்தியாவில் நடப்பாண்டில் வருமான வரி செலுத்திய பிரபலங்களின் பட்டியலில் விஜய் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். வருமான வரி செலுத்துவதும் ஒருவகையில் சமூக அக்கறை தான். அவ்வகையில் ஒரு குடிமகனாக தனது கடமையை நிறைவேற்றி இருக்கிறார் விஜய்.
நடப்பு நிதியாண்டில் அதிகளவு வருமான வரி செலுத்திய பிரபலங்கள் யார் என்பது குறித்து 'பார்ச்சூன் இந்தியா' என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் முதல் 10 இடங்களில் பாலிவுட் நடிகர்கள் தான் அதிகமாக உள்ளனர். இந்தப் பட்டியலில் ரூ.92 கோடி வருமான வரியை செலுத்தி பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அடுத்ததாக தமிழ்நாட்டில் இருந்து நடிகர் விஜய் ரூ.80 கோடி வருமான வரியை செலுத்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ரூ.75 கோடியுடன் சல்மான் கான் மூன்றாவது இடத்திலும், ரூ.71 கோடியுடன் அமிதாப்பச்சன் நான்காவது இடத்திலும், ரூ.66 கோடியுடன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ரூ.42 கோடியுடன் அஜய் தேவ்கன் ஆறாவது இடத்திலும், ரூ.38 கோடியுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் தல தோனி 7வது இடத்திலும், ரூ.36 கோடியுடன் ரன்பீர் கபூர் 8வது இடத்திலும் உள்ளனர். ரூ.28 கோடியுடன் ஹிரித்திக் ரோஷன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் 9வது இடத்திலும், ரூ.26 கோடியுடன் கபில் சர்மா 10வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியப் பிரபலங்கள் வரியே இவ்வளவு கட்டுகிறார்கள் என்றால், இவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என ரசிகர்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், வருமான வரியை முறையாக செலுத்தி வருவதால் இவருக்கான மதிப்பு மக்கள் மத்தியில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் களத்தில் ஒரு சிறு மாற்றத்தையாவது விஜய்யால் ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.