"நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற" என்று பாட்டுப்பாடி வாழ்த்திய பாக்யராஜ்!

South Indian film writers Association Meet Vijay
bhakkiyaraj with Vijay image credit: Bhagyaraj X
Updated on

தமிழக அரசியலில் திரைத்துறையின் பின்னணி என்பது அண்ணா காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக உள்ளது. தமிழகத்தின் முதலமைச்சர்கள் பெரும்பாலும் திரையுலகை சார்ந்தவர்களாகவே இதுவரை இருந்துள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெற்றி பெற்று நடிகர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

திரைத் துறையில் இருந்து வந்து, எம்ஜிஆருக்கு பின் சொந்தமாக கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்ற பெருமை விஜய்க்கு மட்டுமே உண்டு. விஜய் வெற்றி பெற்றதில் இருந்து தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் , தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக, அதன் நிர்வாகிகளான நாசர், கார்த்திக் , கருணாஸ் உள்ளிட்டோர் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து நேற்று தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் ஜி.கே.எம். குமரன் மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இன்று திரைப்பட இயக்குநர் சங்கத்தின் சார்பாக கே. எஸ்.ரவிக்குமார் , வெங்கட் பிரபு உள்பட பல்வேறு இயக்குநர்கள் விஜயை சந்தித்து வாழ்த்தினர்.

தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள் பலரும் விஜயை சந்தித்து வருகின்றனர். இதன் நீட்சியாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் பலரும் , தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு சென்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் அவருடன் பல எழுத்தாளர்களும் , சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு முதல்வர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது தமிழ் திரை உலகில் தற்போது எழுத்தாளர்களின் நிலை குறித்தும் முதல்வருக்கு விளக்கப்பட்டது. திரைப்படங்களுக்கு கதை எழுதும் எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது , அவர்களின் கதைக்கு காப்புரிமை , ராயல் டி உள்ளிட்ட உரிமைகளை பாதுகாக்க ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. திரைப்பட எழுத்தாளர்களின் எதிர்காலம் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

பாக்யராஜ் இந்த சந்திப்பின்போது விஜய்க்கு புகழாரம் சூட்டியுள்ளார். பின்னர் தனது எக்ஸ் தளத்தில் விஜயை சந்தித்த புகைப்படங்களை பதிவிட்டிருந்த பாக்யராஜ். "தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தமிழக மக்களால் புதிய விடி வெள்ளியாய் உதிக்க வைத்த முதல்வர் விஜய் அவர்களை, 'நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற'என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளால் வாழ்த்தினோம்" என்று பதிவிட்டுள்ளார்.

பாக்யராஜின் இந்த பதிவு தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. அவரது மகன் சந்தனு பாக்யராஜ், விஜயின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com