மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனைப் பாராட்டிய பாரதிதாசன்!

Bharadhidhasan - MSV
Bharadhidhasan - MSV
Published on

தமிழ் இசையுலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பிடித்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன். இவர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ஒரு கவிதைக்கு மெட்டமைத்தது வரலாற்றில் தவிர்க்க முடியாத முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வை விவரிக்கிறது இந்தப் பதிவு.

இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற எழுத்தாளராக திகழ்ந்தவர்களில் பாரதிதாசனும் ஒருவர். இவரின் எழுத்துகள் அறியாமையை விளக்கி புரட்சியைத் தூண்டியது. புரட்சிமிகு கவிஞரான பாரதிதாசன் தமிழின் மீது கொண்ட பற்றால் பல கவிதைகளை எழுதினார். அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு கவிதை தமிழ்த் திரைப்பட உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதற்கு மிக முக்கிய காரணம் எம்.எஸ்.விஸ்வநாதன். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அன்றைய காலங்களில் தமிழின் ஆதிக்கம் அதிகளவில் இருந்தது. திரைப்படங்களில் தூய தமிழில் வசனம், பாடல் என தமிழின் பெருமை மிகு காலம் அது.

1965 ஆம் ஆண்டு தமிழில் வலம்புரி சோமநாதர் கதை எழுதி, கே.சங்கர் இயக்கிய பஞ்சவர்ணக்கிளி என்ற திரைப்படம் வெளிவந்தது. இப்படத்திற்கு மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்தார். மேலும், கவிஞர் வாலி பாடல் வரிகளை எழுதினார். இத்திரைப்படத்தின் பாடலுக்கு மெட்டு அமைக்கும் சமயத்தில் எம்எஸ்வி-க்கு மனதில் ஒரு சிந்தனை உதித்தது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற கவிதைக்கு மெட்டமைத்து, திரைப்படத்தில் வெளியிட்டால் எப்படி இருக்கும் என சிந்தித்து, இந்தக் கவிதைக்கு பல டியூன்களில் மெட்டும் அமைத்து விட்டார். அதில் 2 டியூன்களை மட்டும் கடைசியாகத் தேர்வு செய்து, அதில் ஒன்றை மட்டும் திரைப்படத்தில் பயன்படுத்த நினைத்தார்.

இந்தக் கவிதைக்கான ட்யூனை பாரதிதாசனே தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய எம்.எஸ்.வி., அவரிடம் சென்று இரண்டு டியூன்களையும் போட்டுக் காட்டினார். அதில் ஒன்றைத் தேர்வு செய்த பாரதிதாசன், நம் இனிய தமிழ்மொழி அமுதத்திற்கு சமம் என்பது நீங்கள் போட்ட மெட்டில் தான் எனக்கும் தெரிய வருகிறது என்று பாராட்டினார். இதனைக் கேட்டவுடன் எம்.எஸ்வி. ஆனந்தக் கண்ணீரில் நனைந்தார்.

இதையும் படியுங்கள்:
பாரதியையும் பாரதிதாசனையும் ஒரே பாட்டில் ஒன்றிணைத்த கண்ணதாசன்!
Bharadhidhasan - MSV

இருப்பினும் பாரதிதாசன் இறந்த பிறகு தான் பஞ்சவர்ணக்கிளி திரைப்படம் திரைக்கு வந்தது. 1964 இல் பாரதிதாசன் மண்ணுலகை விட்டுப் பிரிந்ததும், 1965 இல் படம் ரிலீஸ் ஆக, எ‌ம்.எஸ்.வி. மெட்டமைத்த பாரதிதாசனின் கவிதைப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கிளாசிக் சினிமாவின் மெல்லிசை மன்னராக வலம் வந்த எம்.எஸ்.வி., சிவாஜி மற்றும் எம்ஜிஆர் மட்டுமன்றி புதிய கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கும் இசையமைத்து இசையுலகை ஆட்சி செய்தவர். கவிஞர் கண்ணதாசன் உடன் எம.எஸ்.வி இணைந்து பணியாற்றிய பல படங்களின் பாடல்கள் ரசிகர்களின் உள்ளத்தில் இன்றும் நிறைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com