இருபதாம் நூற்றாண்டில் ஆகப்பெரும் இலக்கியச் செம்மல்களாக இருந்த பாரதியாரையும், பாரதிதாசனையும் இணைத்து கண்ணதாசன் பாடிய பாடல் வரிகளைக் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
பாரதியும், பாரதிதாசனும் சுதந்திர வேட்கையை மக்கள் மத்தியில் தங்களது எழுத்துகளால் புகுத்தியவர்கள். பாரதியின் எழுத்துகள் அடிமை இருளில் சிக்கித் தவித்த பெண்களுக்கு வெளிவரும் துணிச்சலைத் தந்தது என்றால், பாரதிதாசனின் எழுத்துகள் தங்களது உரிமைக்காக பெண்களை புரட்சி செய்ய வைத்தது.
தமிழ் திரைப்படத் துறையில் 5,000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள கண்ணதாசன், மரபுக் கவிதையின் கடைசி வாரிசாக பார்க்கப்படுகிறார். அவருக்குப் பின் ஒலியழகும், சொல்லழகும், அணியழகும் பொருந்திய மரபுக்கவிதைகள் எழுதும் கவிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். இருபெரும் தமிழ் ஆளுமைகளை ஒரே பாட்டில் இணைத்துப் பாடுவது என்பது சாதாரண ஒன்றல்ல. இதனை மிகச் சிறப்பாக செயதுள்ளார் கவியரசு கண்ணதாசன்.
“களைமண்டிக் கிடந்த கனித்தமிழ் மொழியை
களை நீக்கி வடித்த கவிஞன் பாரதி
களைநீக்கித் தந்த களநியிற் பலவாய்
கனிக்காடு கண்டவர் பாரதிதாசன்
இருள் சூழ்ந்திருந்த இவ்வைய முழுதும்
எழுகதிரான இளைஞன் பாரதி
எழுந்த கதிர்முன் மானிட சாதிக்கு
இரத்தம் ஊட்டினார் பாரதிதாசன்
ஆதிபத்திய வேரறுக்குந் திறன் கொண்டு
ஆக்கித் தந்த வல்லவன் பாரதி
அந்த வேரை அறுத்தபின் மறுவேர்
அண்டாது காத்தவர் பாரதிதாசன்
நிலைகுலைந் திருந்த நெஞ்சினைத் தூக்கி
நில்லெனச் சொன்ன வல்லோன் பாரதி
நிற்க வைத்த நெஞ்சினைத் தட்டி
நிலைக்க வைத்தவர் பாரதிதாசன்
எங்கள் நாடு எங்கள் மொழியென
இயம்புந் திறனை தந்தவன் பாரதி
இயம்ப மறுத்து ஏளனம் செய்தோர்
எலும்பை முறித்தவர் பாரதிதாசன்
முன்னவர் சொன்ன பண்பாடனைத்தும்
முறையாய் தந்த மூத்தவன் பாரதி
முறையாய் தந்ததை வகை வகையாக்கி
முளைக்க விட்டவர் பாரதிதாசன்
செந்தமிழ் மலரின் தேனுண்ண வாசலைத்
திறந்து விட்ட தலைவன் பாரதி
திறந்த வாசலின் வழிப்புறம் மாடுகள்
செல்லாது காத்தவர் பாரதிதாசன்
வகுத்தவன் முன்னோன்! காத்தவன் பின்னோன்!
வாழும் தமிழின் காவலர் இவர்கள்”
வறண்ட தமிழ் நிலத்தை பண்படுத்தி விதை விதைத்து தண்ணீர் பாய்ச்சியவர் பாரதி என்றால், அந்நிலத்தில் விளைந்த பயிர்களைக் கட்டிக் காத்தவர் பாரதிதாசன். இருள் சூழ்ந்த தமிழ் உலகில் ஒளியேற்றியவர் பாரதி என்றால், இதற்கு உணர்வை ஊட்டி ரத்தம் கொடுத்தவர் பாரதிதாசன் என இருவரையும் ஒன்றிணைத்துள்ளார் கண்ணதாசன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனிப்பட்ட ஓராயிரம் சக்தி இருந்தும், அதனை யாரும் உணராதிருந்த நேரத்தில் சமுதாயத்தின் விடிவெள்ளியாகத் தோன்றியவர்கள் தான் பாரதியும், பாரதிதாசனும் என கண்ணதாசன் இப்பாட்டில் எடுத்துரைக்கிறார்.
கண்ணதாசன் எழுதிய காவியத்தில் எப்பேற்பட்ட கவித்திறன் இது. தமிழின் மீது அளப்பரிய அன்பு கொண்ட இருபெரும் கவிஞர்களை தமிழ் எழுத்துகளாலேயே கௌரவித்த கண்ணதாசனின் எழுத்துக்கு நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும். தமிழை உயிராய் நேசித்த பாரதியும், பாரதிதாசனும் இன்றளவும் இந்தப் பூவுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழ் உயிர்ப்பித்து இருக்கும் வரை இவர்களின் புகழும் நிலைத்திருக்கும்.